நீலகிரியில் சட்டவிரோத மனை பிரிவுகள் மீது நடவடிக்கை
நீலகிரியில் சட்டவிரோத மனை பிரிவுகள் மீது நடவடிக்கை
ADDED : செப் 29, 2026 03:28 AM
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், அனுமதியின்றி உருவாக்கப்பட்ட, 17 சட்ட விரோத மனை பிரிவுகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தடையின்றி நடக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் விதிமீறல் மனை பிரிவுகள் தொடர்பாக, நீலகிரி சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவரான, ஓய்வுபெற்ற கூடுதல் தலைமை செயலர் சுர்ஜித் சவுத்ரி, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை சுட்டிகாட்டிய ஆணையம், '500 சதுர மீட்டருக்கு அதிகமான அல்லது, 8 குடியிருப்புகளுக்கு மேற்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் அனுமதி கட்டாயம் என்பதை தெளிவுபடுத்திஉள்ளது.
மேலும், 'புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள, 17 மனை பிரிவுகள் மற்றும் கட்டடங்களின் நிலப்பரப்பு, குடியிருப்புகளின் எண்ணிக்கை குறித்த துல்லியமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் நில உரிமையாளர்கள் மீது சட்டப்படியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கவும்' முடிவு செய்துள்ளது.
ஓய்வுபெற்ற கூடுதல் தலைமை செயலர் சுர்ஜித்சவுத்ரி, ''நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட, சட்டவிரோத மனை பிரிவுகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், அளிக்கப்பட்ட மனு மீது, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால், விதிமீறியவர்கள் மீது நிச்சயம் சட்ட நடவடிக்கை பாயும்,'' என்றார்.
