/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'குப்பட்டாவை' தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை; விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
/
'குப்பட்டாவை' தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை; விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
'குப்பட்டாவை' தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை; விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
'குப்பட்டாவை' தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை; விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 23, 2024 10:29 PM
ஊட்டி : ஊட்டி, கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். விவசாயிகள் ஏற்கனவே கடிதம் வாயிலாக தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அதிகாரிகளிடம் இருந்து விவரம் பெறப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில், பல விவசாயிகள் பேசியதாவது:
தோட்டக்கலைத்துறை வாயிலாக விவசாய நிலத்தை சமன் செய்தல், மண் அள்ளுதல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு குப்பட்டா இயந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அனுமதி வழங்க மாதக்கணக்கில் காலதாமதம் ஆகிறது. இதனால் குறிப்பிட்ட பருவத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
எனவே, விவசாய பணிகளை குறித்த காலத்தில் தொடங்க வசதியாக விண்ணப்பித்த உடனே அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பட்டா இயந்திரம் பயன்படுத்தும் விவசாயிகளை, பத்திரிகையாளர் என்ற பெயரில் சிலர் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் லட்சுமி பவ்யா
தோட்டக்கலைத்துறை வாயிலாக விவசாய பணிக்காக சிறிய கனரக இயந்திரம் (குப்பட்டா) மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. விவசாய பணிகளுக்காக அனுமதி பெற்று சிலர், வேறு பணிகளுக்கு தவறாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு, தவறாக பயன்படுத்தும் விவசாயிகள், இனிமேல் குப்பட்டா இயந்திரம் பயன்படுத்த அனுமதி பெற முடியாமல் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.
தோட்டக்கலைத்துறை வாயிலாக குப்பட்டா அனுமதி பெற கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், அனுமதி பெற விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் 'ஆன்லைன்' முறையில் மாற்றப்படும். விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குப்பட்டா பயன்படுத்தும் விவசாயிகளிடம் பணம் கேட்டு, பத்திரிகையாளர் பெயரில் சிலர் மிரட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசில் புகார் தெரிவித்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி
முன்பு மண்வளம் பெறும் வகையில் ஒரு போகம் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படாமல் மண் அப்படியே விடப்படும்.
தற்போதைய காலகட்டத்தில் அதிக லாபம் ஈட்டும் வகையில் விவசாய நிலத்தை, 4 போகமும் காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது.
மேலும், அளவுக்கு அதிகமாக மண்ணில் ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் கொட்டப்படுகின்றன. இதனால், மண்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மலை காய்கறி விவசாயிகள் மண்வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.