/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பார்க்கிங்' தளமாக மாறிய ஆடம் நீரூற்று சாலை; அவசர நேரத்தில் 'ஆம்புலன்ஸ்' செல்லவும் தடை
/
'பார்க்கிங்' தளமாக மாறிய ஆடம் நீரூற்று சாலை; அவசர நேரத்தில் 'ஆம்புலன்ஸ்' செல்லவும் தடை
'பார்க்கிங்' தளமாக மாறிய ஆடம் நீரூற்று சாலை; அவசர நேரத்தில் 'ஆம்புலன்ஸ்' செல்லவும் தடை
'பார்க்கிங்' தளமாக மாறிய ஆடம் நீரூற்று சாலை; அவசர நேரத்தில் 'ஆம்புலன்ஸ்' செல்லவும் தடை
ADDED : டிச 31, 2024 07:00 AM

ஊட்டி : ஊட்டி சேரிங்கிராஸ் ஆடம் நீரூற்று அருகே, காந்தி சிலையை ஒட்டிய, தேசிய நெடுஞ்சாலை, அறிவிக்கப்படாத 'பார்க்கிங்' தளமாக மாறியதால், அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி சேரிங்கிராஸ் ரவுண்டானா பகுதி, 'கோத்தகிரி சாலை, குன்னுார் சாலை, கமர்சியல் சாலை மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை,' என, நான்கு சந்திப்புகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தவிர, சுற்றுலா பயணியர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு, காந்தி சிலையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில், வார இறுதி நாட்கள்; சீசன் காலங்களில் வாகன நெரிசலை சமாளிக்க, போலீசார் தடுப்பு அமைத்து அனைத்து வாகனங்களையும் ஆடம்ஸ் நீரூற்று வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றி வந்தனர். வாகன நெரிசல் இல்லாத பிற நாட்களில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த சாலையில் எந்த வாகனங்களும் செல்ல முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. காந்தி சிலையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' பகுதியாக மாறியுள்ளது.
அவசர தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் அனுமதி வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன நெரிசல் நேரங்களில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'காந்தி சிலை ஒட்டிய இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்த்து, கடந்த காலங்களை போல, வார இறுதி நாட்களை தவிர்த்து பிற நாட்களில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
குறிப்பாக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் இடையூறின்றி செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
ஊட்டி டி.எஸ்.பி., நவீன்குமார் கூறுகையில்,''குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.