/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுவுடன் போதை காளான்! மாணவி மரணம்: காதலன் கைது
/
மதுவுடன் போதை காளான்! மாணவி மரணம்: காதலன் கைது
ADDED : பிப் 12, 2024 10:58 PM

ஊட்டி;ஊட்டியில் கல்லுாரி மாணவி மரணமடைந்ததை தொடர்ந்து, போலீசார் மாணவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்த மாணவன், கேத்தி அருகே உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த, 19 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் பள்ளி நண்பர்கள். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வார விடுமுறையை ஒட்டி கடந்த சனிக்கிழமை அந்த மாணவியை தனது வீட்டுக்கு, மாணவர் அழைத்து வந்துள்ளார். மறுநாள் ஞாயிறு அன்று மாணவி இறந்து கிடந்த தகவலை அடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊட்டி நகர இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறுகையில், ''கடந்த சனிக்கிழமை பாம்பே கேசில் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் மது பாட்டில்களை வாங்கி இருவரும், மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். பின், மாணவர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் உட்கொண்டுள்ளனர்.
போதை தலைக்கேறி இருவரும் படுத்துள்ளனர், அப்போது அந்த மாணவி மூச்சு திணறி இறந்துள்ளார். மறுநாள் இதை பார்த்த மாணவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவ ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில் அந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தகவலின் பேரில், போலீசார் சென்று சோதனையிட்டதில், மதுபாட்டில்கள்; போதை காளான்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.