/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவில் நடமாடுவதை தவிர்க்க அறிவுரை
/
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவில் நடமாடுவதை தவிர்க்க அறிவுரை
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவில் நடமாடுவதை தவிர்க்க அறிவுரை
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவில் நடமாடுவதை தவிர்க்க அறிவுரை
ADDED : ஆக 18, 2025 07:56 PM
கூடலுார்:
'கூடலுாரில் யானைகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க பொதுமக்கள், இரவில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலுார் பகுதியில், மா, பலா பழம் சீசன் என்பதால், காட்டு யானைகள் இரவில் உணவுக்காக அதனை தேடி கிராமங்களுக்குள் வருவது அதிகரித்துள்ளது.
வனத்துறையினர், இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இதனால், ஆபத்தை தவிர்க்க, 'யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், இரவில் மக்கள் தேவை இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்,' என, வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு, 12:00 மணிக்கு புளியம்பாறை சாலையில், முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அவ்வழியாக சென்ற யானை விரட்டும் குழுவினர், 'யானைகள் இருப்பதால் நடந்து செல்ல வேண்டாம், எனக் கூறி, அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல வாகனத்தில் ஏறும்படி கூறினர். ஆனால், அவர் அதனை ஏற்காமல் நடந்து சென்றார்.
அதேபோன்று இளைஞர்கள் சிலர் சாலையில் நடந்து சென்றனர். அவர்களை வனத்துறை எச்சரித்து வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். அவர்கள் வனத்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பணியில், வன ஊழியர்கள் இரவு முழுவதும் கண்விழித்து, பணியாற்றி வருகின்றனர். மேலும், யானை நடமாட்டம் குறித்து மக்களுக்கு தெரிவித்து வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தி வருகிறோம். எனினும் சிலர் நள்ளிரவு நேரத்தில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் யானையிடம் சிக்கி, உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. எனவே, யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், ஆபத்தை உணர்ந்து இரவில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,'என்றனர்.