ADDED : மார் 19, 2026 06:16 PM

பந்தலுார்: 'தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் எடுத்து செல்ல பொருள், விற்பனை செய்பவர்கள், ஜி.எஸ்.டி., பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக எல்லையான, பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதியை ஒட்டிய, கேரளா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் துவக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லைக்குள் உட்பட் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், வாகன சோதனையில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர். வாகனங்களில் சென்று, கடைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்கள், கூடுதல் பணத்துடன் வரும் நிலையில், பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப்போது அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, 'கடைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையில், ஜி.எஸ்.டி., பில் வழங்கி பணத்தை வாங்க வேண்டும். இதனால், குழப்பம் ஏற்படாது,' என, அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பந்தலூர் அருகே தமிழக எல்லை பகுதியான மேங்கோரேஞ்ச் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபாலன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், சாதாரண பில்லுடன் பலர் வந்தபோது குழப்பம் ஏற்பட்டது. அப்போது, குறைவான பணத்தை எடுத்து வந்த விற்பனையாளர்களிடம், தேர்தல் நடத்தி விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் முடியும் வரை கடைகளுக்கு பொருட்கள்; பணம் எடுத்து வரும் போது, உரிய ஆவணங்களுடன் வந்தால் குழப்பங்கள் குறைய வாய்ப்புள்ளது,' என்றனர்.
