/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேளாண் துறை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு உரத்தின் தரம்!ஐந்து மாதங்களில் 174 உர மாதிரிகள் பரிசோதனை
/
வேளாண் துறை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு உரத்தின் தரம்!ஐந்து மாதங்களில் 174 உர மாதிரிகள் பரிசோதனை
வேளாண் துறை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு உரத்தின் தரம்!ஐந்து மாதங்களில் 174 உர மாதிரிகள் பரிசோதனை
வேளாண் துறை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு உரத்தின் தரம்!ஐந்து மாதங்களில் 174 உர மாதிரிகள் பரிசோதனை
ADDED : ஆக 14, 2024 12:32 AM
ஊட்டி;மலை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தும் உரத்தின் தரம் மற்றும் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா, என்பதை உறுதி செய்யும் வகையில் வேளாண் துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நீலகிரியில் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை, 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது.
'நீர் போகம், கார் போகம், கடை போகம்,' என, மூன்று பருவங்களில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் என, 300 க்கு மேற்பட்ட உரக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், சிறு விவசாயிகள் தேயிலை, மலை காய்கறி பயிர்களுக்கு தேவையான உரங்களை, மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் பெறுகின்றனர்.
அதில், 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், கலப்பு உரம்,' உள்ளிட்ட உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதில், 'விவசாயிகள் பயன்படுத்தும் உரத்தின் தரம் மற்றும் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா,' என்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வேளாண் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆண்டு இலக்கு எவ்வளவு?
வேளாண் துறை தரக்கட்டுப்பாடு மூலம் ஆண்டு தோறும் உரங்கள் மாதிரிக்கு எடுக்கப்பட்டு, தரமற்ற உரங்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது கண்டறியப்படுகிறது. அதன்படி, 'உரங்கள் மாதிரி ஆண்டு இலக்கு, 300; பூச்சிக்கொல்லி மாதிரி, 150; உயிர் உரங்கள், 13; அங்கக உரங்கள் , 19,' என, ஆண்டு இலக்கு நிர்ணயித்து மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தரமற்றவைகளை கண்டறிந்து வேளாண் துறையினர் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வேளாண் உதவி இயக்குனர் சுதா (தரக்கட்டுப்பாடு) கூறுகையில், ''ஆண்டு தோறும் உரங்கள் மாதிரி, பூச்சிக்கொல்லி, உயிர் உரங்கள், அங்கக உரங்களுக்கு இலக்கு நிர்ணயித்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். நடப்பாண்டில், ஏப்., மாதம் முதல் ஆக., மாதம் வரை மொத்த இலக்கான, 482 ல் , 174 உர மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். இதில், உரங்களில், 2 மாதிரிகள் மட்டும் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து உர மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம்,'' என்றார்.