ADDED : மார் 28, 2025 09:10 PM
ஊட்டி; ஊட்டி முத்தோரை பாலாடா அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு, விளையாட்டு சீருடைகள், மெத்தை, கம்பளி, போர்வைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதனை வழங்கி, கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:
மாநில அரசு பள்ளி கல்வித்துறை, பழங்குடியினபள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பாட புத்தகங்கள், சீருடைகள், பஸ் பாஸ், கல்வி உதவித்தொகையுடன், பள்ளியின் உட்கட்டமபை்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவியர் விடுதி மற்றும் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் இங்கு நடந்து வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நன்றாக பயின்று, வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இப்பள்ளிக்கு, கோரமண்டல் நிறுவனம் மற்றும் ரவுண்ட்டேபிள் அமைப்பு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக, மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள், மெத்தை, கம்பளிகள், போர்வைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை வழங்கி உள்ளனர். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
அதில், டி.ஆர்.ஓ., சதீஷ், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், கோரமண்டல் நிறுவன பிரதிநிதி கோபால் சத்துார் மற்றும் ரவுண்ட் டேபிள் ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் சிவராஜ் பங்கேற்றனர்.