/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பவானி ஆற்றில் 19 இடங்களில் அலாரம்
/
பவானி ஆற்றில் 19 இடங்களில் அலாரம்
ADDED : ஜன 31, 2024 11:35 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, ஆபத்தான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 19 இடங்களில் அலாரம் வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் பலரும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்து மகிழ வருகின்றனர். பவானி ஆற்றில் பில்லூர் அணை, பம்பிங் ஹவுஸ்களில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடும் போது, தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
வேகமும் அதிகமாக இருக்கும். அப்போது பவானி ஆற்றில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மதுபோதையிலும் சிலர் குளிக்கின்றனர்.
பவானி ஆற்றில் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். எனினும் போலீசார் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் போது, அங்கு சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் அத்துமீறி குளிக்கின்றனர். இவர்களை எச்சரிக்கும் விதமாக, பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, அலாரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என வெள்ளிப்பாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமபாளையம், கல்லார் கார்டன், தூரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம். நகர் வாட்டர் டேங், சமயபுரம் செக்டேம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்தூர் என 19 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ஆற்றின் நடுவே அலாரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் போது அலாரம் சத்தம் எழுப்பும். அதனை எச்சரிக்கையாக கருதி, அங்கு யாராவது ஆற்றில் குளித்தாலோ, துணி துவைத்தாலோ வெளியேறிவிட வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான கள ஆய்வு விரைவில் செய்யப்பட உள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.----