/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏரியில் நவீன தொழில்நுட்பத்தில் துார் வாரும் பணிக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு! கோடை சீசனுக்குள் படகு இல்லத்தை பொலிவாக்க திட்டம்
/
ஏரியில் நவீன தொழில்நுட்பத்தில் துார் வாரும் பணிக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு! கோடை சீசனுக்குள் படகு இல்லத்தை பொலிவாக்க திட்டம்
ஏரியில் நவீன தொழில்நுட்பத்தில் துார் வாரும் பணிக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு! கோடை சீசனுக்குள் படகு இல்லத்தை பொலிவாக்க திட்டம்
ஏரியில் நவீன தொழில்நுட்பத்தில் துார் வாரும் பணிக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு! கோடை சீசனுக்குள் படகு இல்லத்தை பொலிவாக்க திட்டம்
ADDED : டிச 12, 2024 09:55 PM

ஊட்டி; ஊட்டி ஏரியை, 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'டிரேட்ஜிங்' எனப்படும் நவீன தொழில் நுட்பத்தில் துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள படகு இல்ல ஏரி, ஆங்கிலேயர் காலத்தில் நகருக்கு குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கும் பயன்பட்டு வந்தது. அதன்பின், சுற்றுலா மேம்பாட்டுக்காக படகு இல்லமாக மாற்றம் பெற்றது.
நகராட்சியில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, கடந்த காலங்களில் பாதாள சாக்கடைகள் இல்லாத போது, குடியிருப்புகளின் கழிவு நீர் இணைப்புகள், ஏரிக்கு தண்ணீர் வரும், கோடப்பமந்து கால்வாயில் விடப்பட்டன. இதனால், நகரின் கழிவுநீர் அனைத்தும் ஏரியில் கலந்து தண்ணீர் மாசடைந்தது. இதனால், சுற்றுலா வரும் பயணிகள் படகு சவாரி செய்யும் போது துர்நாற்றம் வீசியது.
சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
இதை தொடர்ந்து, ஊட்டி நகரில் உள்ள குயிருப்புகளின் கழிவுநீர் செல்ல, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏரியில் கழிவுகள் கலப்பது குறைக்கப்பட்டது. மேலும், ஏரி கரையில் பொதுப்பணி துறையின் நீர்வளப்பிரிவு சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, கோடப்பமந்து கால்வாயில் வரும் கழிவுநீர் அனைத்து சுத்திகரிக்கப்பட்டு, ஏரியில் விடப்பட்டது. இதனால், ஏரிநீர் ஓரளவு துாய்மையாகி, துர்நாற்றம் வீசுவது குறைந்தது.
எனினும், ஏரியை சுற்றி, ஆகாயதாமரை மற்றும் காட்டுச்செடிகள் அதிக அகளவில் வளர்ந்து படகு சவாரிக்கு இடையூறு ஏற்பட்டது.
குறைந்து வரும் ஏரியின் அளவு
இதனால், ஆரம்பத்தில், 0.989 மில்லி கன மீட்டராக இருந்த ஏரியின் கொள்ளளவு தற்போது, 0.691 மில்லி கன மீட்டராக குறைந்துள்ளது. ஒவ்வொரு முறையும், ஊட்டி ஏரியை முழுமையாக துார் வாராமல் விடப்பட்டதால், அதிகளவில் சகதி சேர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏரியை துாய்மையாக்கும் வகையில், சென்னை அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் இரு நாட்கள் ஆய்வு நடத்தி சென்றனர்.
புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
அதன் பின், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சமீபத்தில் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பூமி பூஜை நடந்தது. தற்போது, 'டிரேட்ஜிங்' தொழில் நுட்பத்தில் துார் வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
துார் வாரும் மண், ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை மறு சுழற்சி கிடங்கு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை கோடை சீசனுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

