UPDATED : அக் 29, 2026 10:54 PM
ADDED : அக் 29, 2026 10:50 PM

குன்னுார்: ‘குன்னுார்– மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுமதிக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார்– மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் பகுதியில் கடந்த, 23ல் நிலச்சரிவு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டன. தற்போது, பணிகள் நிறைவு பெற்ற நிலையில், உத்தரகாண்ட் நிலச்சரிவு தடுப்பு நிபுணர் பல்ராஜ் சிங் ஆய்வு செய்து, சிறிய பாறை கற்கள் உள்ள இடங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ‘இலகுரக வாகனங்கள் இயக்கலாம்,’ எனவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து, வெயிலான காலநிலை நிலவி வரும் நிலையில், உயிர் காக்கும், 108 ஆம்புலென்ஸ்களை மட்டும் அனுமதிக்க, உள்ளூர் மக்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இங்கு வந்த, 108 ஆம்புலென்சை விடுவதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், ஆம்புலென்ஸ் கோத்தகிரி வழியாக நோயாளியுடன் சென்றது.
மக்கள் கூறுகையில், ‘ காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் ஆலோசனை செய்து, இப்பகுதியில் ஆம்புலென்ஸ்களை மட்டும் அவசர காலகட்டத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
