/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்ட வனப்பகுதிகளில் விலங்கு வேட்டை அதிகரிப்பு! பட்டியல் வகை உயிரினங்களுக்கு ஆபத்து
/
மலை மாவட்ட வனப்பகுதிகளில் விலங்கு வேட்டை அதிகரிப்பு! பட்டியல் வகை உயிரினங்களுக்கு ஆபத்து
மலை மாவட்ட வனப்பகுதிகளில் விலங்கு வேட்டை அதிகரிப்பு! பட்டியல் வகை உயிரினங்களுக்கு ஆபத்து
மலை மாவட்ட வனப்பகுதிகளில் விலங்கு வேட்டை அதிகரிப்பு! பட்டியல் வகை உயிரினங்களுக்கு ஆபத்து
ADDED : பிப் 08, 2024 09:57 PM

குன்னுார்: மாவட்டத்தின் பல பகுதிகளில் வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது.
நீலகிரி உயிர்சூழல் மண்டலம், சதுப்புநிலங்கள், நீர்நிலைகளில் அரிய வகை தாவரங்கள், பல்லுயிர்கள் வாழும் சூழல் கொண்ட முக்கியத்துவம் பெற்ற பகுதியாக உள்ளதால், இதற்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இங்கு புல்வெளிகளாக இருந்த இடங்கள் தேயிலை எஸ்டேட்டுகளாக மாறியது. தற்போது, தேயிலை எஸ்டேட்கள் கட்டட காடுகளாக மாறி வருகிறது. பல பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவர வனப்பகுதி அருகிலேயே காட்டேஜ்கள் பெருகி வருகின்றன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர, இரவில் விலங்குகளை காணும் வகையில் சில வாகனங்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர, சில இடங்களில் மறைமுகமாக வன விலங்குகள் வேட்டையாடி, சுற்றுலா பயணிகளுக்கு அசைவ விருந்து படைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
வேட்டையர்கள் உலா...
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, கடந்த அக்., 19ம் தேதி, காட்டேரி அணை அருகே கெந்தளா சாலையில் இறந்து கிடந்த காட்டெருமையை குந்தா வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து எருமை இறந்தது தெரிய வந்தது; 50 நாட்கள் கழித்து, 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், அரசியல் ஆதரவு உள்ள முக்கிய குற்றவாளிகள் பிடிபடாமல் 'எஸ்கேப்' ஆகியுள்ளனர். அவர்களை வனத்துறையின் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கூடலுார் ஓவேலியில் கடந்த வாரம் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயத்துடன் சுற்றி வந்த காட்டெருமை இரண்டு நாட்கள் கழித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி, பழைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், குன்னுார் வண்டிச்சோலை சரவணமலை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகளுடன் வேட்டையர்கள், 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் விலங்கு வேட்டை அதிகரித்து வருவது தெரிய வந்தது.
இது போன்று தொடரும் வேட்டை சம்பவங்களால், மாவட்டத்தில், அழிவின் பட்டியலில் உள்ள பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால்,வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வேண்டிய கட்டாயம் வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை அவசியம்
'நெஸ்ட்' சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவன தலைவர் சிவதாஸ் கூறியதாவது:
மாவட்ட வனப்பகுதிகளில், சில ஆண்டுகளுக்கு முன்பு கருங்குரங்கு, காட்டு கோழிகள், காட்டு முயல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது இவற்றை பார்ப்பது அரிதாக உள்ளது. சமீப காலமாக காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டெருமை வேட்டை அதிகரித்துள்ளது.
வனப்பகுதியை சூழ்ந்த பகுதிகளின் அருகே வாழும் பலர் உறவினர்களின் வருகையின் போது விருந்துக்காக சிறிய விலங்குகளை வேட்டையாடி வருவது தொடர்கிறது.
அதில், குன்னுார் ட்ரூக், மசினகுடி, சரவணமலை, தீட்டுக்கல், பாலகொலா, அவலாஞ்சி, பார்சன்ஸ்வேலி, எப்பநாடு உட்பட பல இடங்களிலும் இறைச்சிக்காக விலங்குகள் வேட்டையாடப்படுவதும், வனத்துறையினர் அதனை பிடிப்பதும் தொடர்கிறது.
இதனை முழுமையாக தடுக்க, வனத்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

