/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வறட்சிக்கு மாறி வரும் வனப்பகுதி; உணவுக்காக இடம் பெயரும் விலங்குகள்
/
வறட்சிக்கு மாறி வரும் வனப்பகுதி; உணவுக்காக இடம் பெயரும் விலங்குகள்
வறட்சிக்கு மாறி வரும் வனப்பகுதி; உணவுக்காக இடம் பெயரும் விலங்குகள்
வறட்சிக்கு மாறி வரும் வனப்பகுதி; உணவுக்காக இடம் பெயரும் விலங்குகள்
ADDED : பிப் 18, 2025 06:57 AM

கூடலுார்; முதுமலை, மசினகுடி வனப்பகுதியில், வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருவதால், வனவிலங்குகள் உணவு தேடி இடம் பெயர துவங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் வெளிவட்ட பகுதியான, மசினகுடி கோட்டம் புலி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.
வனவிலங்குகளின் குடிநீர் தேவையை, மாயார் ஆறு, தடுப்பணைகள், நீர் குட்டைகள் பூர்த்தி செய்து வருகின்றன. கோடை வறட்சியின் போது, விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி வருவது வழக்கம்.
நடப்பாண்டு தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. தாவரங்கள், செடிகள் கருகி வருவதுடன் மரங்களில் இலைகள் உதிர்ந்து வருவதால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட துவங்கி உள்ளது.
இதனால், விலங்குகள் உணவு தேடி நீர்நிலைகள் உள்ள வனப்பகுதிக்கு இடம்பெயர துவங்கியுள்ளன.
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட பருவமழை அதிகம் பெய்ததால் இதுவரை வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால், தற்போது, வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, புற்கள் காய்ந்து விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட துவங்கி உள்ளது. இதனால், விலங்குகள் உணவு தேடி இடம் பெயர துவங்கி உள்ளன. கோடை மழை ஏமாற்றினால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.