/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேட்டை தடுப்பு காவலர்கள் வேலை நிறுத்தம்; ஒப்பந்த ஊழியர்களாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
/
வேட்டை தடுப்பு காவலர்கள் வேலை நிறுத்தம்; ஒப்பந்த ஊழியர்களாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
வேட்டை தடுப்பு காவலர்கள் வேலை நிறுத்தம்; ஒப்பந்த ஊழியர்களாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
வேட்டை தடுப்பு காவலர்கள் வேலை நிறுத்தம்; ஒப்பந்த ஊழியர்களாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
ADDED : நவ 21, 2024 09:05 PM

கூடலுார் ; முதுமலை, மசினகுடி பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டாம் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில், வன பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில், 90 தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. முதுமலையில் பெரும்பாலான பழங்குடி இளைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பலர், வன காவலர்களாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகின்றனர். சிலர் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில், அரசு உத்தரவுப்படி, வேட்டை தடுப்பு காவலர்களை ஒப்பந்த அடிப்படை பணியாளர்களாக மாற்றும் நடவடிக்கையை வனத்துறை துவக்கி உள்ளது.
இந்த நடவடிக்கைக்கு, முதுமலை, மசினகுடி கோட்டம், சிகூர், சிங்கார வன சரகத்தில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வேட்டை தடுப்பு முகாம்களில் கண்காணிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர்கள் தயானந்தன், தனபால் ஆகியோரை வேட்டை தடுப்பு காவலர்கள் சந்தித்து, பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். தீர்வு கிடைக்காததால், நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். வேட்டை தடுப்பு காவலர்கள் கூறுகையில்,'பிரச்னை தொடர்பாக கோவையில், நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று அதில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் பணிக்கு செல்வோம்,' என்றனர்.