/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் அரிய வகை மரங்கள் வெட்டப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க அதிகாரி உறுதி
/
பூங்காவில் அரிய வகை மரங்கள் வெட்டப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க அதிகாரி உறுதி
பூங்காவில் அரிய வகை மரங்கள் வெட்டப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க அதிகாரி உறுதி
பூங்காவில் அரிய வகை மரங்கள் வெட்டப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க அதிகாரி உறுதி
ADDED : அக் 17, 2024 10:04 PM

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நல்ல நிலையில் உள்ள அரிய வகை மரங்கள் அகற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்கள், குடியிருப்புகள், பள்ளி, கல்லுாரி, அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் நுாற்றாண்டு பழமையான கற்பூரம், சீகை மரங்கள் ஆங்காங்கே அபாயகரமாக உள்ளது. பருவமழை சமயத்தில் பலத்த காற்றுக்கு விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
'அபாயகரமான மரங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தால், மரங்கள் அகற்றப்படும்,' என, தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுக்களை ஆய்வு செய்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏராளமான அபாய மரங்களை படிப்படியாக அகற்றினர்.
இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலை, தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள அபாயகரமான மரங்கள் , பூங்கா நிர்வாகம் மேற்பார்வையில் அகற்றப்பட்டு வருகிறது. பழமையான பூங்காவிற்குள் நுாற்றாண்டு பழமையான அரிய வகையான மரங்கள் அதிகளவில் உள்ளன.
அதில், 'நல்ல நிலையில் உள்ள சில அரிய வகை மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும்; சில பழமையான மரங்களில் கிளைகளை வெட்டப்பட்டு உள்ளன,' என, புகார் எழுந்துள்ளது. மேலும் பூங்காவில் இயற்கை அழகும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காணும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'பூங்கா அழகை கெடுக்கும் வகையில் பல இடங்களில் மரங்கள்; கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. நிர்வாகம் மரம் வெட்டிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,' தாவரவியல் பூங்காவில் கணக்கெடுக்கப்பட்ட அபாயகரமான மரங்கள் மட்டும் தான் அகற்றப்பட்டு வருகிறது. நல்ல நிலையில் உள்ள மரங்கள் ஏதும் அகற்றியதாக தெரியவில்லை. அரிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.