/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விண்வெளி தாக்குதலை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்: முப்படை இளம் அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் அறிவுரை
/
விண்வெளி தாக்குதலை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்: முப்படை இளம் அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் அறிவுரை
விண்வெளி தாக்குதலை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்: முப்படை இளம் அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் அறிவுரை
விண்வெளி தாக்குதலை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்: முப்படை இளம் அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் அறிவுரை
UPDATED : ஏப் 11, 2025 05:35 AM
ADDED : ஏப் 11, 2025 01:14 AM

குன்னுார்:'சைபர், விண்வெளி மற்றும் தகவல் போர் போன்றவை சக்திவாய்ந்ததாக இருப்பதால், பாதுகாப்பு படைகள் கூட்டாக செயல்பட வேண்டும்,'' என, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
வேகமாக நகர்கிறது
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், 26 நட்பு நாடுகளை சேர்ந்த 38 பேர் உட்பட, 479 இளநிலை அதிகாரிகள், 45 வார பயிற்சியை நிறைவு செய்து, 80வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
விழாவில், அதிகாரிகளுக்கு பட்டம் வழங்கி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
'உலகமயமாக்கலில் பின்னடைவு, தீவிர தேசியவாதம், வளங்களின் பற்றாக்குறை, மனித இடப்பெயர்வு, உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றம், உலகளாவிய தொற்றுநோய்களின் அச்சுறுத்தல்' போன்ற உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது.
தற்போது, 'செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், சைபர், எலக்ட்ரானிக்ஸ்' போன்றவையும், பாதுகாப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
நிலம், கடல் மற்றும் வான் போன்ற பாரம்பரிய களங்களுக்கு அப்பால், போர், விண்வெளி, கடலுக்கடியில் என, புதிய களங்களுக்கு நேராக வேகமாக நகர்கிறது.
குறைந்த உயர சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக் கோள்கள், ராணுவ உளவுத்துறையின் தொடர்ச்சியான கண்காணிப்பு, தகவல்தொடர்பு முறையை மாற்றியமைத்து வருவதால், போர் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம், ஆளில்லா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு போன்றவை போரின் தன்மையை பாதிக்கின்றன.
சைபர், விண்வெளி மற்றும் தகவல் போர் போன்றவை சக்தி வாய்ந்ததாக இருப்பதால், பாதுகாப்பு படைகள் கூட்டாக செயல்பட வேண்டும்.
மறைமுக போர்
நம் நாட்டில் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்.
அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தின் மையப்பகுதியிலிருந்து வெளிப்படும் மறைமுக போர் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கிறது.
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள், நம் இந்தோ -பசிபிக் பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், நம் ஒட்டுமொத்த பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பிரதமரின் தொலைநோக்கு இலக்கான 2047ம் ஆண்டுக்குள், வளர்ச்சியடைந்த, சுயசார்புடன் கூடிய, உலகளவில் மதிக்கப்படும் இந்தியாவை நோக்கி நாம் நகர்கிறோம்.
நம் ஆயுதப் படைகள், அசைக்க முடியாத விழிப்புணர்வு மற்றும் தியாகம் மூலம், பாதுகாப்பான இந்தியாவை உறுதி செய்கின்றன.
எதிர்கால போர்களுக்கு திறன் கொண்டதாக இருக்க, 'தொழில்நுட்ப மாற்றங்களுடன் வேகத்தை அதிகரிப்பது, அதை வழிநடத்துவது; உயர் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவது; ஆயுதப் படைகளின் சண்டை திறனை மேம்படுத்துவது' என, ஆயுதப் படை வளர்ச்சி மற்றும் நவீனமயம் அவசியமாகி உள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். தகவல், ராணுவ, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப களங்களின் ஒருங்கிணைப்பு வெற்றியை உறுதி செய்ய, ராஜதந்திர நடவடிக்கை அவசியம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

