/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏறுமுகமான தேயிலை ஏலம்; வர்த்தகர்கள் மகிழ்ச்சி
/
ஏறுமுகமான தேயிலை ஏலம்; வர்த்தகர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 08, 2024 12:10 AM
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டு வருவதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னுார் ஏல மையத்தில், 40வது ஏலம் நடந்தது. அதில், '18.89 லட்சம் கிலோ இலை ரகம்; 4.42 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 23.31 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
அதில், மொத்தம், 18.40 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு, 161.05 ரூபாய் என இருந்தது. கடந்த ஏலத்தை விட, 2.45 லட்சம் கிலோ வரத்து குறைந்தது. எனினும், சராசரி விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது.
இதனால், மொத்த வருமானம், 29.65 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 3.04 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது. கிலோவுக்கு, 4 ரூபாய் சராசரி விலை உயர்ந்தது. கடந்த, 7 வாரங்களை ஒப்பிடுகையில் சராசரி விலை, 59 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால், பசுந்தேயிலை விலை நிர்ணயமும் அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தென் மாநிலத்தில் ஏற்றம்
குன்னுார் ஏலத்தை போன்று, 'டீசர்வ்', கோவை, கொச்சி ஏல மையங்களிலும், 40வது ஏலம் ஏற்றம் கண்டது.
'டீசர்வ்' ஏலத்தில் வந்த, 1.28 லட்சம் கிலோ தேயிலை துாள், 100 சதவீதம் விற்றது. கோவையில், 5.34 லட்சம் கிலோ வந்ததில், 4.97 லட்சம் கிலோ விற்றது. கொச்சியில், 10.88 லட்சம் கிலோ வந்ததில், 10.38 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலையில், தேயிலை கிலோவிற்கு, 'கொச்சியில், 178.27 ரூபாய்; கோவையில், 163.97 ரூபாய்; டீசர்வில் 148 ரூபாய்,' என, இருந்தது.
தேயிலை வர்த்தகத்தில், ஏறுமுகமாக உள்ள ஏலத்தில், வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டு வருவதால் வர்த்தகர்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.