சட்டசபை தேர்தல் எதிரொலி: 355 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
சட்டசபை தேர்தல் எதிரொலி: 355 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
ADDED : மார் 23, 2026 03:19 PM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், 355 துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், சுய பாதுகாப்பிற்காக அரசிடம் உரிய உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள், அவற்றை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், மாவட்டத்தில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ள, 355 நபர்கள் தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர், உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 395 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர். அதில், 355 துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கி பாதுகாப்பு பணி உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு என, 40 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பின், இந்தத் துப்பாக்கிகள் அனைத்தும் அந்தந்த உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்,' என்றனர்.
