/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
34 இடங்களில் தானியங்கி கேமராக்கள்
/
34 இடங்களில் தானியங்கி கேமராக்கள்
ADDED : நவ 28, 2025 04:36 AM

கூடலுார்: முதுமலை மாவனல்லா பகுதியில், பெண்ணை தாக்கி கொன்ற புலியை பிடிக்க மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனல்லா பகுதியில், 24ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த, நாகியம்மாள், 60, என்பவரை புலி தாக்கி கொன்றது.
தொடர்ந்து, துணை இயக்குனர் (பொ) கணேசன் தலைமையில் சிங்கார வனச்சரகர் தனபால் உள்ளிட்ட, 40 வன ஊழியர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து 'டிரோன்' கேமரா பயன்படுத்தியும், 34 இடங்களில் வைத்துள்ள தானியங்கி கேமராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பசு மாட்டை தாக்கிய புலி இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி தாக்கியது; மாடு காயங்களுடன் உயிர் தப்பியது. அதன்பின், முதுமலை கள இயக்குனர் கிருபா சங்கர் தலைமையில் நடந்த சிறப்பு கூட்டத்தில், கூண்டு வைத்து புலியை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை, மூன்று இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
360 டிகிரி சுழலும் கேமரா வனத்துறையினர் கூறுகையில், 'பெண்ணை தாக்கி கொன்ற ஆண் புலிக்கு, 12 வயது இருக்கும். புலியை பிடிக்க, 5 கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, மூன்று கூண்டுகள் புலி நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கூண்டு, 20 அடி நீளம்;10 அடி உயரம்; 10 அடி அகலம் கொண்டதாகும். அதில், 360 டிகிரி கோணத்தில், 24 மணி நேரமும் சுழலும் சி.சி.டி.வி., கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்கள் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடுவதையும், இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். புலி நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.

