/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலப்பட டீ துாளை தவிர்த்தால் நோயில்லை
/
கலப்பட டீ துாளை தவிர்த்தால் நோயில்லை
ADDED : மார் 21, 2025 09:57 PM

கூடலுார்; 'நோய்கள் ஏற்படுவதை தடுக்க, கலப்பட டீ துாளை கண்டறிந்து தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லுாரியில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி தலைமை வகித்தார்.
தேயிலை வாரிய மேம்பாட்டு அதிகாரி அஞ்சலி பேசுகையில், ''கலப்பட உணவுகளை தவிர்ப்பதன் மூலம், பல நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கலப்படமில்லாத, துாளை பயன்படுத்தி தயாரிக்கும் தேநீரை குடிப்பதன் மூலம், உடலில் நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கலப்பட தேயிலை துாளை பயன்படுத்தினால், பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கலப்பட தேயிலை துாள் கண்டறிந்து தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, கலப்பட தேயிளை துாளை கண்டறிவது குறித்து, மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி சிவசுப்பிரமணியன் பேசுகையில், ''கடைகளில் 'பேக்கிங்' செய்யப்பட்ட, உணவு பொருட்களின் சுவையை கூட்ட ரசாயனங்களை பயன் படுத்துகின்றனர். இவைகள் உடலில் நோய்கள் ஏற்பட காரணமாக இருப்பதால், அவைகளை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர் வீராசாமி, மின் துறை உதவி பொறியாளர் சந்தோஷ், மாணவர்கள் பங்கேற்றனர்.