/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில எல்லை பகுதிக்கு பஸ் இல்லாமல் அவதி
/
மாநில எல்லை பகுதிக்கு பஸ் இல்லாமல் அவதி
ADDED : அக் 13, 2024 09:59 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே குந்தலாடி- பாட்டவயல் வழித்தடத்தில் பஸ் இல்லாமல், பயணிகள் மட்டுமின்றி பஸ் ஓட்டுனர்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார் அருகே மாநில எல்லையில் பாட்டவயல் மற்றும் அய்யன்கொல்லி பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழக, கூடலுார் கிளையில் இருந்து, பந்தலுார் மற்றும் குந்தலாடி வழியாக இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதில், இயக்கப்பட்ட இரண்டு அரசு பஸ்களும் புதிய பாடி கட்டுவதற்காக, கொண்டு செல்லப்பட்டது. அதில், ஒரு பஸ் புதியபாடி கட்டப்பட்டு, தேவர்சோலை, பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் சுல்தான் பத்தேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
அதற்கு பதிலாக, பழைய பஸ் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பஸ்சுக்கு பதிலாக தனியாக பஸ் ஒதுக்கீடு செய்யாத நிலையில், நாள்தோறும் பஸ் இயக்குவதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பகுதி மக்கள் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், ''ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் மழை நேரத்தில் ஒழுகுவதாக போக்குவரத்து உயரதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கிளை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணி வழங்கப்பட்டது. இதனை மனதில் வைத்து கொண்டு இந்த வழித்தடத்தில் பஸ் ஒதுக்கீடு செய்ய, கிளை நிர்வாகம் மறுத்து வருகிறது.
பஸ்களின் அவல நிலையை சுட்டிக்காட்டும் இந்த வழித்தட மக்களை பழிவாங்கும் வகையில், கிளை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, தனியாக இந்த வழித்தடத்திற்கு பஸ் ஒதுக்கீடு செய்து தர வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால், போக்குவரத்து கழக கிளை நிர்வாகம் மீது பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.