/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'சைபர் கிரைம்' மோசடி குறித்து விழிப்புணர்வு
/
'சைபர் கிரைம்' மோசடி குறித்து விழிப்புணர்வு
ADDED : நவ 28, 2025 03:27 AM
ஊட்டி: சைபர் கிரைம் மோசடியில் சிக்காமல் இருப்பத குறித்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அளவுக்கு சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, கல்வி அறிவு இல்லாதவர்கள் எளிதில் பணத்தை இழப்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டி அருகே அதிகரட்டி கிராமத்தில் நிதி மேலாண்மை மற்றும் நிதி முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி பயிற்சியாளர் கல்யாண சுந்தரம் கிராம மக்களிடம் கூறியதாவது:
பண பரிவர்த்தனைக்காக மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை யாரிடமும் கூறக்கூடாது; ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் போது, கார்டை பிற நபர்களிடம் கொடுத்து பணம் எடுத்து தர சொல்ல கூடாது;
'வாட்சப், டெலிகிராம், பேஸ்புக், மெசெஞ்சரில்' வரும் சலுகைகள் குறித்த தகவல்களில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; இளையோர் வேலைவாய்ப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும்; முறையான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் டெபாசிட் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
சில நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்புகளுடன் அணுகினால், வர்த்தக தளத்தை ஆராய்ந்து பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; சைபர் மோசடி தொடர்பாக பலரும் ஏமாந்து போலீசில் புகார் அளிக்கின்றனர்.
நீங்கள் இத்தகைய மோசடிக்கு ஆளாகியிருந்தால் சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண், 1930க்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
இவ்வாறு கூறினார்.
மேலும், கிராமத்தில் உள்ள முதியோர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க செயலாளர் சிவலிங்கம் செய்திருந்தார்.

