/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சிகளை சிற்றுாராட்சிகளாக மாற்றினால் பெறும் பயன் செயல்படுத்த கோரி விழிப்புணர்வு பயணம்
/
ஊராட்சிகளை சிற்றுாராட்சிகளாக மாற்றினால் பெறும் பயன் செயல்படுத்த கோரி விழிப்புணர்வு பயணம்
ஊராட்சிகளை சிற்றுாராட்சிகளாக மாற்றினால் பெறும் பயன் செயல்படுத்த கோரி விழிப்புணர்வு பயணம்
ஊராட்சிகளை சிற்றுாராட்சிகளாக மாற்றினால் பெறும் பயன் செயல்படுத்த கோரி விழிப்புணர்வு பயணம்
ADDED : பிப் 13, 2025 09:20 PM
குன்னுார்,; ஊராட்சிகளை சிற்றுாராட்சிகளாகவும், பேரூராட்சிகளை ஊராட்சியாகவும் மாற்றுவதுடன், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி, குன்னுார்; ஊட்டியில் விழிப்புணர்வு பயணம் நடந்தது.
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த கோரி, அறப்போர் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ளாட்சி உரிமை மீட்பு பயணம் நடந்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலுார், பாலகொலா ஊராட்சிகளில் நடந்த நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஊர் தலைவர் சந்திரன் வரவேற்றார்.
நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகள் மீட்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் குக்கிராமங்களை பேரூராட்சிகளாக வைத்துள்ளதால், மக்கள் வாழ்க்கை தரம் உயராமல் இருக்கிறது. எனவே, அனைத்து பேரூராட்சிகளையும் ஊராட்சிகளாக மாற்ற வேண்டும்.
பரப்பளவு அதிகமாக உள்ள, 35 ஊராட்சிகளையும், நிர்வாக வசதிக்காக, 93 சிற்றுாராட்சிகளாக பிரித்து கலெக்டர் அளித்துள்ள கருத்துருவை அரசு உடனடியாக பரிசீலித்து சிற்றுாராட்சிகளாக உருவாக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்,'' என்றார்.
நிர்வாகி நந்தகுமார் பேசுகையில்,''கிராமங்கள் அதிகமாக உள்ள நம் நாட்டில் அதிகாரம் மிக்க உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக இருந்தால்தான் மக்களின் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேளாண்மை உள்ளிட்ட கிராம தொழில்கள் பெருகி பொருளாதாரம், வளர்ந்து மக்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும். எனவே, அரசு உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,'' என்றார்.
சமூக ஆர்வலர் கைகாட்டி சுப்ரமணியன், காந்தியமக்கள் இயக்க மகளிர் பிரிவு மாநில தலைவி வள்ளி ரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்புகள் குறித்து பேசினர்.
கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் தமிழக முதல்வருக்கு தபால் அட்டையில் எழுதி அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஊட்டி ஒன்றியம் இத்தலார் ஊராட்சி, நஞ்சநாடு ஊராட்சிகளிலும் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்றனர்.