பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு; சுற்றுலா பயணியருக்கு அறிவுரை
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு; சுற்றுலா பயணியருக்கு அறிவுரை
ADDED : மார் 16, 2026 06:49 AM

குன்னூர்: குன்னூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு, கல்லூரி மாணவியர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட 18க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் வகைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குன்னூர் ரயில் நிலையத்தில், பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதுநிலை மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆராய்ச்சி பிரிவு சார்பில், தூய்மை பசுமை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டியில் இருந்து குன்னூர் வந்த சுற்றுலா பயணிகளுக்கு கல்லூரி மாணவியர், பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை தவிர்ப்பதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர். கவுன்சிலர் சையது மன்சூர் தலைமை வகித்தார்.
ஏற்பாடுகளை, கல்லூரி கம்ப்யூட்டர் துறை தலைவர் டாக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் பாவ்யா, பர்கத் மற்றும் ஆராய்ச்சி மாணவியர் ஒருங்கிணைந்து செய்தனர்.
