/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் பழங்குடி கிராமத்தில் சட்டபணிகள் ஆணை குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பந்தலுார் பழங்குடி கிராமத்தில் சட்டபணிகள் ஆணை குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலுார் பழங்குடி கிராமத்தில் சட்டபணிகள் ஆணை குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலுார் பழங்குடி கிராமத்தில் சட்டபணிகள் ஆணை குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2025 08:15 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே போத்து கொல்லி பழங்குடியினர் கிராமத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்றார்.
வக்கீல் கணேசன் பேசுகையில், ''பழங்குடியின மக்களுக்கு பல்வேறு குறைகள் இருந்த போதும், தீர்வு காண யாரும் முன் வருவதில்லை. பிறப்பு சான்றிதழ், ஆதார், ரேசன் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் பலரும் சிரமப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது,'' என்றார்.
வக்கீல் ஷினுவர்கீஸ் பேசுகையில்,''பழங்குடியின மக்கள் தினசரி வேலைக்கு செல்லும் போது, குழந்தைகளையும் வேலைக்கு அழைத்துசெல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில்,''பழங்குடியின மக்கள் கல்வி அறிவை மேம்படுத்தி கொண்டால், அனைத்து தேவைகளையும் நீங்களாகவே கேட்டு பெற முடியும். அதேபோல, சட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல், முக்கிய ஆவணங்கள் இல்லாதது குறித்து, இலவச சட்ட பணிகள் ஆணைக்குழுவை நாடினால் உரிய தீர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், 'தனியார் கல்லுாரியில் படிப்பை பாதியில் விட்ட பழங்குடியின மாணவியிடம் கட்டணம் கேட்டு கல்லுாரி நிர்வாகம் தொல்லைபடுகிறது,' என, புகார் தெரிவிக்கப்பட்டது.
'இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என, நீதிபதி உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில், வக்கீல்கள் சவுகத் அலி, ஜான்சன், மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நாவா ஒருங்கிணைப்பாளர் விஜயா நன்றி கூறினார்.