/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில்களில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
/
கோவில்களில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
ADDED : அக் 11, 2024 10:05 PM
ஊட்டி : ஊட்டியில் உள்ள கோவில்களில் ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதில், ஊட்டி மாரியம்மன் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில்; எல்க்ஹில் முருகன் கோவில்; காந்தள் காசி விஸ்வநாதர் கோவில்; கோத்தகிரி மாரியம்மன் கோவில்; சக்திமலை முருகன் கோவில்; டானிங்டன் விநாயகர் கோவில் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
l மசினகுடியில் அமைந்துள்ள, ஸ்ரீமசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா, 2ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு, 9:00 மணிக்கு தசரா திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மசினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஊர்வலம், மசினகுடிநகர், மசினகுடி கேம்ப், மாயார் சாலை, ஊட்டி சாலை வழியாக பாலம் அருகே சென்றது. அங்கு அதிகாலை, 4:00 அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஊட்டி சாலை வழியாக தேர் கோவிலை வந்தடைந்தது.
நேற்று, காலை சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்குதல், முளைப்பாரி எடுத்து வருதல், மாவிளக்கு பூஜைகள் நடந்தது. இன்று, சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீசிக்கம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
l கூடலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை முன்னிட்டு கோவில்கள்; வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடந்தது. 9வது நாளான நேற்று, விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வீடுகளிலும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கூடலுார் நகரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அலங்கரிக்கப்பட்டு, ஆயுத பூஜை நடத்தப்பட்டது. பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
l குன்னுார் அருகே உள்ள அருவங்காடு விநாயகர் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. விழாவில், பாலாம்பிகை, மூகாம்பிகை, ராஜராஜேஸ்வரி, காமாட்சி, கமலாம்பாள் அம்மன் கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும், 20க்கும் மேற்பட்ட கொலு வைத்து நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று சுஹாஷினி பூஜை, கன்னி பூஜை, சுமங்கலி பூஜை ஆகியவை நடந்தது. அம்மன், கற்பக ரட்சாம்பிகை, சரஸ்வதி அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக ராகு கால பூஜையில் பக்தர்களுக்கு தாம்பூல பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரசாத வினியோகம் நடந்தது.