/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலூர் தொகுதியில் மருத்துவத்தில் பின்னடைவு; 'பிரதமர் ஆயுஸ்மான் பாரத்' திட்டத்தை மாற்றியதால் அதிருப்தி
/
கூடலூர் தொகுதியில் மருத்துவத்தில் பின்னடைவு; 'பிரதமர் ஆயுஸ்மான் பாரத்' திட்டத்தை மாற்றியதால் அதிருப்தி
கூடலூர் தொகுதியில் மருத்துவத்தில் பின்னடைவு; 'பிரதமர் ஆயுஸ்மான் பாரத்' திட்டத்தை மாற்றியதால் அதிருப்தி
கூடலூர் தொகுதியில் மருத்துவத்தில் பின்னடைவு; 'பிரதமர் ஆயுஸ்மான் பாரத்' திட்டத்தை மாற்றியதால் அதிருப்தி
ADDED : பிப் 08, 2024 10:10 PM
பந்தலுார் : 'கூடலுாரில், 'பிரதமர் ஆயுஸ்மான் பாரத்' திட்டத்தின் கீழ், அனைத்து வசதிகளும் கூடிய ஆய்வகத்தை அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகள் தமிழக எல்லை பகுதியில் உள்ளன.
இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள், பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
அதில், மக்களின் தேவைக்காக, பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் இரண்டு நகர சுகாதார நிலையங்கள், ஒன்பது ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதில், பெரும்பாலான சுகாதார நிலையங்கள் டாக்டர்கள் இல்லாமல் நடந்து வருவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லுாரி ஆக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கூடலுார் அரசு மருத்துவமனை பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
எனினும், போதிய அளவு டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. இந்நிலையில், மத்திய அரசு மூலம் மேற்கொள்ளப்படும், 'பிரதமர் ஆயுஸ்மான் பாரத்' சுகாதார திட்டத்தின் கீழ், அனைத்து வசதிகளும் கூடிய ஆய்வகம், 10 கோடி ரூபாய் செலவில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்த ஆய்வகம் நிறுவ வேண்டிய நிலையில், கூடலுார் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டம், குன்னுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
போதிய ஆய்வக வசதி இல்லை
கூடலுார் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆய்வக பரிசோதனைக்கு, '150க்கும் மேற்பட்டோர், பிரசவத்திற்கு, 70 பேர் மற்றும் புற நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், உள் நோயாளிகளாக, 60 பேர்,' என, வந்து செல்கின்றனர்.
இதே போல், பந்தலுார் அரசு மருத்துவமனைக்கும் தினசரி, 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனைகளில் போதிய அளவு ஆய்வக வசதி இல்லாததால், கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் தனியார் ஆய்வகங்களை நாட வேண்டிய நிலை தொடர்கிறது . பழங்குடியின மக்களுக்கு எந்த வசதியும் இல்லாத நிலையில் ஆய்வக பரிசோதனை என்பது இவர்களுக்கு இயலாத காரியமாக உள்ளது.இதனால், கூடலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், இந்த நவீன ஆய்வகத்தை நிறுவினால் பயனாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் சிகிச்சை என்பது எட்டா கனியாக உள்ள நிலையில், கேரளா தனியார் மருத்துவமனைகளை நாடி செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.
மத்திய அரசின் நவீன ஆய்வகத்தை, கூடலுாரில் அமைக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசியல் காரணங்களால், குன்னுாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

