/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி எல்லையோர கிராமங்களில் வவ்வால்கள்; கேரள மாநில 'நிபா' அச்சத்தில் உள்ளூர் மக்கள்
/
நீலகிரி எல்லையோர கிராமங்களில் வவ்வால்கள்; கேரள மாநில 'நிபா' அச்சத்தில் உள்ளூர் மக்கள்
நீலகிரி எல்லையோர கிராமங்களில் வவ்வால்கள்; கேரள மாநில 'நிபா' அச்சத்தில் உள்ளூர் மக்கள்
நீலகிரி எல்லையோர கிராமங்களில் வவ்வால்கள்; கேரள மாநில 'நிபா' அச்சத்தில் உள்ளூர் மக்கள்
ADDED : ஜூலை 14, 2025 11:03 PM

பந்தலுார்; கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவி வரும் நிலையில், நீலகிரி மாவட்ட எல்லையோர கிராமங்களில் காணப்படும் வவ்வால்களால், அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட, 6 மாவட்டங்களில் 'நிபா' வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், இதனை ஒட்டிய மலப்புரம் மாவட்டத்திலும், 'நிபா' தாக்கம் இருக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக- - கேரளா எல்லைப் பகுதிகளில், மாநில சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களில் வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர்அனுமதிக்கின்றனர். இந்நிலையில், கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், கண்ணுார் ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் தாக்கம் பரவி உள்ளதாக, கேரளா மாநில சுகாதாரத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வவ்வால்கள் உமிழ்நீர் மற்றும் ருசித்த பழங்கள் மூலம் 'நிபா' வைரஸ் தாக்கம் ஏற்படுவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வயநாடு அருகே, தமிழக எல்லை பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள, நீலகிரி மாவட்ட மக்கள்மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, பந்தலுார் அருகே எருமாடு பகுதியில், பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய மரங்களில் அதிக அளவில் வவ்வால்கள் முகாமிட்டுள்ளதால், இங்குள்ள பழங்குடிகள் உட்பட பிற கிராம மக்கள் 'நிபா' அச்சத்தில் உள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு, சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி காய்ச்சல் இருந்தால், உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்; அறிவுரைகள் வழங்கவேண்டும்,' என்றனர்.