ADDED : ஆக 19, 2025 09:08 PM
கோத்தகிரி:
கோத்தகிரி பகுதியில் வீசிய காற்றில் கொடி பீன்ஸ் மற்றும் பட்டாணி கொடிகள் சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி பேரகணி, எரிசிபெட்டா, தொட்டண்ணி, நெடுகுளா, கூக்கல்தொரை, மசக்கல், கட்டபெட்டு மற்றும் கொணவகொரை பகுதிகளில் ஆடிபட்டத்தில் காய்கறி விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், அதிக பரப்பளவில் கொடி பீன்ஸ் மற்றும் பட்டாணி விதைத்து, குச்சிகளை ஊன்றி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது, கொடி பீன்ஸ் மற்றும் பட்டாணி பூக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் கொடிகளில் பூக்கள் உதிர துவங்கியுள்ளது. ஊன்று குச்சிகள் சாய்ந்து உள்ளன.
இதனால், மகசூல் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, வலியுறுத்தி உள்ளனர்.

