ADDED : செப் 23, 2025 06:17 AM

குன்னுார்; குன்னுார் அருகே கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட, கக்குச்சி, சக்திநகர் பகுதியில், 150 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக குட்டியுடன் வந்து செல்லும் கரடி, வீடுகளின் கதவுகளை தட்டுவதாகவும், உடைத்து செல்வதாகவும் பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள செல்லபாப்பு, பத்மா, சுப்ரமணி ஆகியோரின் வீட்டு கதவுகளை நேற்று முன்தினம் நள்ளிரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளே புகுத்த கரடி, எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை உட்கொண்டது. சப்தம் கேட்ட மக்கள் தீப்பந்தம் ஏந்தி சென்றதால் ஓட்டம் பிடித்தது.
மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் நாள்தோறும் வரும் கரடியால் இரவில் நடமாட முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.