/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளிக்கு இரவில் வரும் கரடியால் பொருட்கள் சேதம்
/
பள்ளிக்கு இரவில் வரும் கரடியால் பொருட்கள் சேதம்
ADDED : ஆக 10, 2025 09:26 PM

குன்னுார்; குன்னுார் மேலுார் ஒசட்டி பஞ்., யூனியன் ஆரம்ப பள்ளிக்கு இரவில் வரும் கரடி, கதவுகளை உடைத்து பொருட்களை சேதம் செய்து வருகிறது.
குன்னுார் பகுதிகளில் தற்போது நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளதால், பழங்களை தேடி கரடிகள் வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மோலுார் ஒசட்டிக்கு கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் வரும் கரடி, பஞ். யூனியன் ஆரம்பப் பள்ளி கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதம் செய்து வருகிறது.
நேற்று அதிகாலை, பள்ளிக்குள் புகுந்த கரடி, சத்துணவுக்காக வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணெயை உட்கொண்டு, உணவுப் பொருட்களை சேதம் செய்தது.
பெற்றோர் கூறுகையில்,'பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்லும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவும், கதவுகளை பாதுகாப்புடன் முழுமையாக சீரமைத்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் மதிய உணவு சமைக்க முடியாத நிலையில் உள்ளது. பகல் நேரத்தில் வந்தால் மாணவர்களை தாக்கும் அபாயமும் உள்ளதால் உடனடி தீர்வு காணப்பட வேண்டும்,' என்றனர்.
குந்தா ரேஞ்சர் செல்வகுமார் கூறுகையில், 'மேலுார் ஒசட்டி பள்ளி வனப்பகுதி அருகிலேயே உள்ளது. மரக்கதவுகளும் பழமையாக உள்ளதால், எளிதாக உடைத்து உள்ளே செல்கிறது.
எண்ணெய் வாசனையை வைத்தே பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. எண்ணெய் உட்பட உணவுப் பொருட்களை பாதுகாப்பான, மாற்று இடங்களில் வைக்க வேண்டும். குழு அமைத்து, இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்,''என்றார்.