/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரம், கிராமங்களில் உலா வரும் கரடிகளால் கதவுகள் சூறை! சுற்றுலா மையங்களில் முகாமிடுவதால் சிக்கல்
/
நகரம், கிராமங்களில் உலா வரும் கரடிகளால் கதவுகள் சூறை! சுற்றுலா மையங்களில் முகாமிடுவதால் சிக்கல்
நகரம், கிராமங்களில் உலா வரும் கரடிகளால் கதவுகள் சூறை! சுற்றுலா மையங்களில் முகாமிடுவதால் சிக்கல்
நகரம், கிராமங்களில் உலா வரும் கரடிகளால் கதவுகள் சூறை! சுற்றுலா மையங்களில் முகாமிடுவதால் சிக்கல்
ADDED : ஜூலை 10, 2025 08:47 PM

ஊட்டி; மாவட்டத்தின் பல பகுதிகளில், இரவு நேரங்களில் கிராமங்களில் நுழைந்து கதவுகளை உடைத்து சூறையாடி வரும் கரடிகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் சமீப காலமாக இயற்கை வளங்கள் அழித்து கட்டுமானம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் விலங்குகள் உட்கொண்ட இயற்கையான பழங்கள், தாவரங்கள் அழிந்து வருவதால், உணவுக்காக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை தேடி வருகிறது.
அதில், ஊட்டி ,குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் பகுதிகளில் அதிகமாக வரும் கரடிகள் வீடுகள், கோவில், சாக்லேட் தொழிற்சாலைகள், ரேஷன் கடைகள், பேக்கிரி கதவுகளை உடைத்து உள்ளே சென்று பொருட்களை உட்கொள்வதுடன், சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்புபவர்கள், வனவிலங்குகள் நடமாட்டத்தால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா மையத்தில் தஞ்சம்
இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே கிளன்ராக் பகுதியில் கரடி ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு, பூங்காவில் உள்ள மரத்தில் கரடி அமர்ந்திருந்தது. இதனை திடீரென பார்த்த ஊழியர்கள் அச்சமடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் வந்த கரடியை விரட்டினர். பாம்பே கேசில் பகுதியில் ஒரு கரடி பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வருகிறது. வீடுகள்; கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதேபோல, மஞ்சூர் அருகே தேனாடு கிராமத்தில் புகுந்த கரடி மளிகை கடையின் கதவை உடைத்து பொருட்களை சூறையாடியது.
கண்டிபிக்கை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு உலா வந்த கரடி சிவன் கோவில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, எண்ணெய் குடித்து பூஜை பொருட்களை சேதப்படுத்தி சென்றது. குன்னுார் தைமலை கிராமத்தில் பகல் நேரத்திலும் கரடி உலா வருவதால் பணிக்கு செல்வோர் அச்சத்தில் உள்ளனர். கோத்தகிரி தேயிலை தோட்டங்களில் கரடிகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி அருகே இந்து நகர் பகுதியில், 150 குடும்பங்கள் வசிக்கும் கணபதி நகர் பகுதியில் கரடிகள் உலா வருவதால், மக்கள் இரவில் அவசர தேவைக்கு கூட வர முடியாத சூழ்ல் உள்ளது. கூடலுார் தேவர் சோலை பகுதியில் சில நாட்களாக கோவில் அருகே பகலில் கரடி உலா வருகிறது. இது போன்று, மாவட்ட முழுவதும் கிராமங்கள் தோறும் உலா வரும் கரடியால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இரும்பு கதவு வேண்டும்
பொதுமக்கள் கூறுகையில், 'குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளால் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பெரிய அளவிலான உறுதி கொண்ட கதவுகளை கரடி உடைப்பதால், கிராம வீடுகளுக்கு இரும்பு கதவுகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பிடித்து முதுமலையில் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.