/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
50 லட்சம் வாழைகளின் நிலை கேள்விக்குறி பவானி ஆறு வற்றியது:நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
/
50 லட்சம் வாழைகளின் நிலை கேள்விக்குறி பவானி ஆறு வற்றியது:நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
50 லட்சம் வாழைகளின் நிலை கேள்விக்குறி பவானி ஆறு வற்றியது:நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
50 லட்சம் வாழைகளின் நிலை கேள்விக்குறி பவானி ஆறு வற்றியது:நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
ADDED : மார் 19, 2024 11:18 PM

மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்ததால், சிறுமுகை மற்றும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில், பயிர் செய்துள்ள, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பில்லூர் அணையில் தொடங்கி தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை வழியாக, பவானி ஆறு ஓடுகிறது. பில்லூர் அணையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய, திறந்து விடும் தண்ணீர், ஆற்றின் வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக மழை ஏதும் பெய்யாததால், பில்லூர் அணையின் நீர்மட்டம், 63 அடியாக குறைந்துள்ளது. அதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், பவானி ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.
50 லட்சம் வாழைகள்
தேக்கம்பட்டியில் இருந்து சிறுமுகை வரை, ஆற்றின் இரு பக்கம் உள்ள பட்டா நிலத்திலும், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க காலி இடத்திலும், விவசாயிகள் வாழைகளை பயிர் செய்வது வழக்கம். பவானி ஆற்றில் இருந்து மின் மோட்டார் மற்றும் ஆயில் மோட்டார் வாயிலாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து, விவசாயிகள் காலம் காலமாக, விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்ததால், சுமார் 50 லட்சம் வாழைகளுக்கு தண்ணீர் முழுமையாக பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து லிங்காபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: சிறுமுகை மற்றும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க காலி இடத்திலும், பட்டா நிலத்திலும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கதலி, நேந்திரன் ஆகிய வாழைகளை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். தற்போது வாழைகள் ஐந்து, ஆறு மாத பயிராக நன்கு வளர்ந்துள்ளன. பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, இந்த வாழைகளுக்கு பாசனம் செய்து வருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிக்கும்
தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் முற்றிலும் குறைந்ததால், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நன்கு வளர்ந்துள்ள வாழைகள் அனைத்தும், இன்னும் நான்கு ஐந்து மாதங்களுக்கு பிறகு, அறுவடை செய்யப்படும். கோடைக் காலத்தில் மழை பெய்யவில்லை என்றால், பவானி ஆற்றில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிடும். அப்போது குலை தள்ளும் நிலையில் உள்ள வாழைகளுக்கு தண்ணீர் இல்லையென்றால் காயும் நிலை ஏற்படும். ஒவ்வொரு விவசாயியும் கடன் பெற்று வாழை பயிரிட்டுள்ளனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால், வாழைகளும் காயும். கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். கோடை மழை பெய்தால், இந்த வாழைகள் உயிர் பிழைக்கும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

