ADDED : செப் 02, 2026 05:22 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே கே.கே. நகர்பகுதியில், நகராட்சி கால்வாயை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பந்தலுார் அருகே கே.கே., நகர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், கிராமத்திற்கு மத்தியில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வழிந்தோட ஏதுவாக, நெல்லியாளம் நகராட்சி சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வழியாக கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களின் குலதெய்வ கோவிலுக்கும் சென்று வந்தனர்.
இந்நிலையில், தனிநபர் ஒருவர் கால்வாயில் கற்களை போட்டு தடுப்பு ஏற்படுத்து அதன் மீது, தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வந்த தங்களை குலதெய்வ கோவிலுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, மக்கள் சார்பில், இளங்கோவன் என்பவர், கூடலுார் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார், நகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் மனு வழங்கியுள்ளார். இப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
