/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்: வாடகை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
/
மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்: வாடகை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்: வாடகை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்: வாடகை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2024 12:02 AM

குன்னுார்;குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், நிலுவை தொகையை வசூல் செய்த அதிகாரிகளை கண்டித்து, வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
குன்னுார் நகராட்சிக்கு சொந்தமான, 896 கடைகளில், 724 கடைகள் மார்க்கெட் வளாகத்தில் உள்ளன. பெரும்பாலான கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டு, நகராட்சிக்கு குறைந்த வாடகை செலுத்திய தனிநபர்கள், அதிக உள்வாடகை வசூலிப்பது, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
தொடர்ந்து, மறு அளவீடு செய்யப்பட்டு, 100 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டது. இதனை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த, 2021ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், 'ஆட்சிக்கு வந்தால் மார்க்கெட் வாடகை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என, தி.மு.க., உறுதி அளித்தது.
ஆட்சிக்கு வந்த பிறகு, 2016ம் ஆண்டு ஜூலை முதல் 2019 வரையில் மறுமதிப்பீடு செய்த மாத வாடகை நிலுவையாகவும், 2019 முதல் 2022 வரையில், 3 ஆண்டுகளுக்கு, 15 சதவீதம் உயர்வு செய்யப்பட்டதை வாடகையாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து, வியாபாரிகளிடம் வாடகை நிலுவை தொகையாக, 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும், மார்க்கெட் கடைகளை புதுப்பிக்கவும், தெரு விளக்கு உட்பட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை.
இந்நிலையில், மார்க்கெட்டில், 18 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ள வியாபாரிகள் சங்க கட்டடத்துக்கு மட்டும் நகராட்சி அதிகாரிகள், நிலுவை தொகை செலுத்த, 2 மாத கால அவகாசம் அளித்துள்ளனர். சாதாரண வியாபாரிகளின் கடைக்கு வாடகை செலுத்தவில்லை எனில், உடனடியாக 'சீல்' வைக்கப்படுகிறது. இதனால், சிறு வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
இந்நிலையில், நேற்று நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில்,'கடைகளுக்கு வரும் கமிஷனரும், அதிகாரிகள் வியாபாரிகளை மிரட்டி காசோலை வாங்கி செல்கின்றனர். தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர்,' என, குற்றம் சாட்டினர். இதற்கு கமிஷனர் பர்ஜானா பதில் அளிக்காத நிலையில், நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா மற்றும் கவுன்சிலர் ராமசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 'சீல் வைத்த கடைகளுக்கு நிலுவை தொகை, 70 சதவீதம் கட்ட வேண்டும்; கடைகளில் வாங்கி சென்ற 'செக்' திரும்ப தரவும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ,' என, உறுதி அளிக்கப்பட்டதால், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

