ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது
ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது
ADDED : டிச 17, 2025 06:40 AM
ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில், ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரி ரத்தவங்கி மற்றும் அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளின் ரத்த தேவைகளை நிவர்த்தி செய்ய, ரத்ததான முகாம்களை தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. அவர்களை கவுரவிக்கும் வகையில், அரசு மருத்துவ கல்லுாரி சார்பில் ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் பாராட்டுவிழா நடந்தது. இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
தலைமை வகித்த மருத்துவ கல்லுாரி முதல்வர் சரவணன் பேசியதாவது:
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் உயிரை காக்கும் வகையில் ரத்த தேவை அதிகரித்து வருகிறது. இவற்றை ஈடுகட்டும் வகையில் தன்னார்வலர்களிடம் ரத்தம் சேகரிக்கப்படுகிறது.
ரத்த சேகரிக்க மிகவும் சிரமப்பட்டு அர்ப்பணிப்புடன் முகாம்களை ஒருங்கிணைத்து தரும் அமைப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். தற்போது, விஷம் அருந்தியவர்கள் உயிர்பிழைக்க உதவும் 'பிளாஸ்மா' ஊட்டியில் மேற்கொள்ளபடுகிறது.
இந்த சிகிச்சைக்கு ரத்த தேவை அதிகரித்து வருகிறது. ரத்தம் அதிகம் கிடைக்கும் சூழலில் அவர்கள் கோவை மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பாமல், இங்கு சிகிச்சை அளித்து உயிரை காக்க முடியும். மேலும், இதர சிகிச்சைகள் மேற்கொள்ளவும் மாதம், 150 யூனிட் வரை தேவைப்படுவதால் அனைத்து தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், 'கூடலுார் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கேத்தி, எப்பநாடு; சேவா பாரதி, குன்னுார் ராணுவ கல்லுாரி, ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரி, நீலகிரி சேவா கேந்திரம், நாம் தமிழர் கட்சி குருதி பாசறை, இந்திய செஞ்சிலுவை சங்கம்,' உட்பட 20கும் மேற்பட்ட ரத்த தான ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
