/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'புல்லட்' யானை; பந்தலுார் சுற்றுப்புற கிராம மக்கள் நிம்மதி
/
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'புல்லட்' யானை; பந்தலுார் சுற்றுப்புற கிராம மக்கள் நிம்மதி
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'புல்லட்' யானை; பந்தலுார் சுற்றுப்புற கிராம மக்கள் நிம்மதி
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'புல்லட்' யானை; பந்தலுார் சுற்றுப்புற கிராம மக்கள் நிம்மதி
ADDED : டிச 28, 2024 12:19 AM

பந்தலுார்; 'புல்லட்' யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் மற்றும் சேரம்பாடி, பிதர்காடு சுற்று வட்டார பகுதிகளில் 'புல்லட்' என்று அழைக்கப்படும் ஆண் யானை ஒன்று தனியாக உலா வந்தது.
இந்த யானை, சத்துணவு கூடங்கள், ரேஷன் கடைகள் மற்றும் குடியிருப்புகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 35 வீடுகளை இடித்து, உணவு பொருட்களை உட்கொண்டது.
இந்நிலையில், கடந்த, 17ஆம் தேதியில் இருந்து இந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
எனினும், இரவில் குடியிருப்புகளை இடித்து வந்ததால், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறை முடிவு செய்தது.
இதை தொடர்ந்து, கடந்த, 2- நாட்களாக புல்லட் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று அய்யன்கொல்லி அருகே கோட்டைப்பாடி என்ற இடத்தில் சாலையோர புதரில், இந்த யானை நின்றிருந்தது.
காலை, 7:00 மணிக்கு கால்நடை டாக்டர்கள் ராஜேஷ்குமார், கலைவாணன் தலைமையிலான குழுவினர், யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி மேற்கொண்டனர். யானை துரத்தியதால் குழுவினர் திரும்பி வந்தனர். தொடர்ந்து, முதுமலை தெப்பக்காடு பகுதியில் இருந்து கும்கிகள் விஜய், சீனிவாசன் ஆகியவை வரவழைக்கப்பட்டன. அதன்பின், யானை அருகே சென்ற கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் மாலை, 4:-55 மணிக்கு பரன் மீது அமர்ந்து முதல் மயக்க ஊசியை காட்டு யானைக்கு செலுத்தினார். அதனை வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான குழுவினர் 'ட்ரோன்' கேமரா உதவியுடன் உறுதி செய்தனர்.
பின்னர் மயக்க நிலையில் நடந்து சென்ற யானைக்கு அருகே, கும்கிகள் விஜய் மற்றும் சீனிவாசன் ஆகிய யானைகள் அழைத்து செல்லப்பட்டு, அவற்றின் பாதுகாப்புடன் புல்லட் யானையின் கால்கள் கட்டப்பட்டன. தொடர்ந்து, பொக்லைன் மற்றும் யானைகள் உதவியுடன், மயக்க நிலையில் இருந்த யானை, 7:45 மணிக்கு லாரியில் ஏற்றப்பட்டது.
வன அலுவலர் வெங்டேஷ் பிரபு கூறுகையில், ''இந்த யானைக்கு மயக்கம் தெளிந்த பிறகு, வனத்துறை உயரதிகாரிகள் ஆலோசனையின் பேரில் எந்த வனப்பகுதியில் விடுவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார். இதனால், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.