/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைத்து... மின் உற்பத்தி அதிகரிப்பு!பிற மாவட்ட மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை
/
அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைத்து... மின் உற்பத்தி அதிகரிப்பு!பிற மாவட்ட மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை
அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைத்து... மின் உற்பத்தி அதிகரிப்பு!பிற மாவட்ட மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை
அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைத்து... மின் உற்பத்தி அதிகரிப்பு!பிற மாவட்ட மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை
ADDED : மே 17, 2024 12:13 AM
ஊட்டி;நீலகிரியில் குந்தா, கெத்தை, பில்லுார் அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைத்து மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், காட்டுகுப்பை, அவலாஞ்சி, பைக்காரா, சிங்காரா, மசினகுடி,' உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் உள்ளன.
மேலும், 'அப்பர்பவானி, எமரால்டு, போர்த்திமந்து,' உள்ளிட்ட, 13 அணைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள மின் நிலையங்களில் நாள்தோறும் 833.65 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
கடந்தாண்டில் பருவ மழை பொய்த்ததால் அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக குறைந்தது. நடப்பாண்டிலுள் ஏப்., மாதம் வரை கோடை மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் தண்ணீர் வற்றியது. மின் உற்பத்தி மேற்கொள்ள அணைகளில் தண்ணீர் இல்லாததால், 8 மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
'பீக் அவர்ஸ்' எனப்படும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி; காலை, 6:00 மணி முதல் 9:00 மணி வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 'கோவை, ஈரோடு, சேலம்,' என, பிற மாவட்டங்களுக்கு தேவையான அளவு மின்சாரம் வினியோகிக்க முடியாமல் மின் வாரியம் திணறியது.
மேலும், பில்லுார் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பைக்காரா கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இங்குள்ள சில அணைகளிலிருந்து தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் வார்டுகளுக்கு வினியோகிக்கப்பட்டது. குறிப்பாக, குந்தா மின் வட்டத்தில், 500 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கெத்தை, பரளி மின் நிலையங்கள் 'பீக்' அவர்ஸ் மின் தேவைக்கு கைகொடுக்கிறது.
தாமதமாக வந்த கோடைமழை
இந்நிலையில், நடப்பாண்டில் தாமதமாக கோடை மழை கடந்த, 4ம் தேதி முதல் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆண்டு தோறும் கோடை மழையின் சராசரி அளவு, 30 செ.மீ., ஆகும். நடப்பாண்டில் கோடை மழை நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 16 செ.மீ., அளவுக்கு பதிவாகியுள்ளது. கோடை மழையின் சராசரி அளவு குறைந்துள்ளது.
'இம்மாதம், 19ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை துவங்கும்,' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழையை எதிர்பார்த்து மின்வாரியம் காத்திருக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பிற மாவட்டங்களில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க அப்பர்பவானி, அவலாஞ்சி அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் 'டனல்' வழியாக எடுத்து செல்லப்படுகிறது.
தொடர்ந்து குந்தா, கெத்தை, பில்லுார் அணைகளில் முழு கொள்ளளவில் தேக்கி வைக்கப்பட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். தற்போது, கெத்தை அணையில், 154 அடிக்கு, 150 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. தென் மேற்கு பருவமழை கை கொடுத்தால் நிலைமை சீராகும்,' என்றனர்.

