/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முக்கிமலை கிராமத்தில் அனுமதியின்றி கற்பூர மரங்கள் வெட்டி சாய்ப்பு!
/
முக்கிமலை கிராமத்தில் அனுமதியின்றி கற்பூர மரங்கள் வெட்டி சாய்ப்பு!
முக்கிமலை கிராமத்தில் அனுமதியின்றி கற்பூர மரங்கள் வெட்டி சாய்ப்பு!
முக்கிமலை கிராமத்தில் அனுமதியின்றி கற்பூர மரங்கள் வெட்டி சாய்ப்பு!
ADDED : ஜன 21, 2025 10:01 PM

மஞ்சூர் ; 'மஞ்சூர் குந்தா -முக்கிமலை சாலையோரத்தில், வருவாய் துறை இடத்தில் நுாற்றுக்கணக்கான கற்பூர மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே பிக்கட்டி பேரூராட்சியில், முக்கிமலை கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாடு பகுதியில், வருவாய் துறைக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. நீலகிரியில் பேரிடர் ஏற்படும், 283 இடங்களில் இந்த இடமும் உள்ளது. இங்கு கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு, கிராம மக்களால் கற்பூர மரங்கள் நடவு செய்யப்பட்டன.
அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள்
இந்நிலையில், கடந்த, 7 நாட்களாக இப்பகுதியில் உள்ள கற்பூர மரங்களின் கிளைகள் மட்டுமல்லாமல், மரங்கள் முழுவதும் வெட்டப்பட்டு வருகிறது. சோலை பகுதியாக இருந்த இந்த பகுதி அழிக்கப்பட்டு வருவதால், ஆய்வு செய்து விதிமீறல்களை தடுக்க கோரி, 'மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார்,' என, தொடர்ந்து இப்பகுதி மக்கள் புகார் மனுக்களை அனுப்பினர்.
அதில், 'நெடுஞ்சாலைத்துறை ஓரத்தில் உள்ள அபாயகரமான மரங்கள் மட்டும் வெட்டப்பட்டன,' என, வருவாய் துறையினர் தெரிவித்தனர். ஆனால், இப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக, மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மாறுபட்ட தகவல்கள்
முக்கிமலையை சேர்ந்த சுகுமாரன் கூறுகையில்,'' இப்பகுதியில் எவ்வித அனுமதியின்றி அதிகளவில் மரம் வெட்டி வருவதால் அதிகாரிகளுக்கு மனு கொடுத்த போது, 19, 21, 27 மரங்களை மட்டும் வெட்டுவதாக வெவ்வேறு தகவல்களை தெரிவித்தனர். கிராம மக்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
ஆனால், 'குறைந்த எண்ணிக்கையில், நெடுஞ்சாலையோர அபாய மரங்களை வெட்டுவதாக தெரிவித்து, அதிகளவிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு நடந்துள்ள விதிமீறல்கள்; அனுமதியின்றி எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை வெட்டிய மரங்களால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சோலைவனமாக இருந்த இந்த பகுதி தற்போது பாலைவனம் போல மாறி வருகிறது. இங்குள்ள மரங்களை பாதுகாப்பதுடன் கூடுதலாக சோலை மரங்களை நடவு செய்து இயற்கை வளத்தை மேம்படுத்த வேண்டும்,''என்றார்.
குந்தா தாசில்தார் சுமதி கூறுகையில்,''வருவாய் துறை நிலத்தில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்ட வேண்டும் என மக்கள் கூறியதால், இதுவரை, 29 மரங்கள் வெட்டப்பட்டன. 'மரங்களை வெட்ட கூடாது,' என, மீண்டும் புகார் வந்ததை தொடர்ந்து, தற்போது வெட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்களில் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.