/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டு உபயோக பொருட்களை வாங்க கார்டுதாரர்களிடம் நிர்பந்திக்க கூடாது! கட்டாயப்படுத்துவது குறித்து தெரிய வந்தால் நடவடிக்கை
/
வீட்டு உபயோக பொருட்களை வாங்க கார்டுதாரர்களிடம் நிர்பந்திக்க கூடாது! கட்டாயப்படுத்துவது குறித்து தெரிய வந்தால் நடவடிக்கை
வீட்டு உபயோக பொருட்களை வாங்க கார்டுதாரர்களிடம் நிர்பந்திக்க கூடாது! கட்டாயப்படுத்துவது குறித்து தெரிய வந்தால் நடவடிக்கை
வீட்டு உபயோக பொருட்களை வாங்க கார்டுதாரர்களிடம் நிர்பந்திக்க கூடாது! கட்டாயப்படுத்துவது குறித்து தெரிய வந்தால் நடவடிக்கை
ADDED : ஜூலை 28, 2025 08:56 PM

ஊட்டி: 'ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் கார்டுதாரர்களிடம் வீட்டு உபயோக பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில், 'முழு நேரம், பகுதி நேரம்,' என, 321 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து பெறப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கார்டுதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தவிர, ரேஷன் கடை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாத, டீ துாள், சோப்பு, பெருங்காயம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கார்டுதாரர்களை பொறுத்தவரை, மாதந்தோறும் அத்தியாவசிய பட்டியலில் உள்ள பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும். குறிப்பிட்ட மாதங்கள் வாங்காமலிருந்தால் சம்மந்தப்பட்ட துறையினர் வாயிலாக கார்டுதாரர்களை நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வாய் மொழி உத்தரவா? இந்நிலையில், 'மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் சில குறிப்பிட்ட பொருட்களை, ரேஷன் அத்தியாவசிய பொருட்களுடன் கார்டுதாரர்களுக்கு வினியோகித்து விற்க வேண்டும்,' என, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் நடுத்தர மக்கள், அரிசி, சர்க்கரை , துவரம் பருப்பு உள்ளிட்டவைகளை கட்டாயம் வாங்குகின்றனர். அப்போது, பட்டியலில் இடம்பெறாத வீட்டு உபயோக பொருட்களை வாங்க சொல்லி, பல ரேஷன் கடைகளில் நிர்பந்தப்படுத்துவதாக கார்டுதாரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கையில் போதிய பணம் இல்லாமல் செல்லும், ஏழை மற்றும் நடுத்தர கார்டுதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'மாவட்ட வழங்கல் துறை அந்தந்த தாலுகாவில் உள்ள தாலுகா வழங்கல் அலுவலர்கள் வாயிலாக திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறுகையில், '' அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் கார்டுதாரர்களிடம் எக்காரணத்தை கொண்டும், வீட்டு உபயோக பொருட்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயமாக வாங்க சொல்லி நிர்பந்தப்படுத்த கூடாது.
அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலர்கள் வாயிலாக, ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு, வீட்டு உபயோக பொருட்களை கட்டாயமாக வாங்க சொல்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.