/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரட் விலை உயர்வு தோட்டங்களில் பணி தீவிரம்
/
கேரட் விலை உயர்வு தோட்டங்களில் பணி தீவிரம்
ADDED : ஜன 22, 2025 11:10 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி கேரட் தோட்டங்களில், களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், தண்ணீர் வசதியுள்ள விளை நிலங்களில் கூடுமானவரை, மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, தேவையான அளவு மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், பனிப்பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், காய்கறி தோட்டங்களில் பயிர்கள் செழித்து வளர்ந்து வருகிறது.
நடப்பாண்டு, பணி தாக்கினாலும் பாதிக்காத கேரட், அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, வ.உ.சி., நகர், ஈளாடா, கூக்கல்தொறை மற்றும் கட்டபெட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கணிசமான பரப்பளவில் கேரட் பயிரிட்டு, விவசாயிகள் தோட்டங்களை பராமரித்து வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் வறட்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அறுவடை செய்யப்படும் கேரட்டிற்கு விலை கிடைக்கும் என்று நம்பிக்கையில், விவசாயிகள் கூடுதல் சிரமத்துடன் பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளில், ஒரு கிலோ கேரட், 50 முதல் 80 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப ஏலம் போகிறது. உள்ளூர் மார்க்கெட்களில், 85 முதல், 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இனிவரும் நாட்களில், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், ஓரளவு ஆறுதல் அடைந்துள்ள விவசாயிகள், மழை ஓய்ந்து, வெயிலான காலநிலையில், கேரட் தோட்டங்களுக்கு உரமிட்டு, களை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.