ADDED : பிப் 11, 2025 11:21 PM
கூடலுார்; மசினகுடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட பலர் மீது மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முதுமலை, மசினகுடி செம்மநத்தம் பழங்குடியினர் கிராமத்தில், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தொகுதி நிதியில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்ட பணிக்காக, ஜன., 30ல், சோலார் பேனல் ஏற்றி சென்ற வாகனத்தை, மசினகுடி வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து, மசினகுடி துணை இயக்குனர் அலுவலகத்தில், 5ம் தேதி மாலை நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படாததால், எம்.எல்.ஏ., தலைமையில், துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறை அதிகாரிகள், போலீசார் நடத்தி பேச்சு வார்த்தையை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், வனத்துறை அளித்த புகாரை தொடர்ந்து, எம்.எல்.ஏ., உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.