/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடைகள் 'பிளாஸ்டிக்' கழிவுகளை உண்ணும் அவலம்
/
கால்நடைகள் 'பிளாஸ்டிக்' கழிவுகளை உண்ணும் அவலம்
ADDED : ஜன 18, 2024 01:47 AM

ஊட்டி, : ஊட்டியில் கால்நடைகள் உணவு கழிவுகளுடன் காணப்படும் 'பிளாஸ்டிக்' மற்றும் குப்பையை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில், தேயிலை, மலை காய்கறிகளுக்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. நீலகிரியை பொறுத்தவரை போதிய அளவு தீவனம் கிடைப்பதில்லை.
மேய்ச்சல் நிலங்கள் சுருங்கியதால் கால்நடைகள் நகர் பகுதியில் வலம் வந்து ஆங்காங்கே வீசப்படும் குப்பை கழிவுகளை உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
குறிப்பாக, ஊட்டி நகரில் தாவரவியல் பூங்கா சாலை, ஐந்து லாந்தர், மெயின்பஜார், லோயர் பஜார், பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., என, பெரும்பாலான பகுதிகளில் கால் நடைகள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. நகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து சம்மந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் அதே பகுதிக்கு சுற்றி வருகின்றன.
குறிப்பாக, சுற்றுலா பயணிகள் உணவுடன் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை அவை உண்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதில், கார்டன் பகுதியில் அங்குள்ள பழங்குடியின மக்கள் வளர்த்து வரும் ஏராளமான வளர்ப்பு எருமைகள், பிளாஸ்டிக் குப்பையில் கழிவுகளை உண்பதால், பிளாஸ்டிக் உணவு குழாயில் அடைத்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
கால்நடை வளர்ப்போர் கூறுகையில், 'கார்டன் சாலையில் பல கடைகள் உள்ள நிலையில், சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது. தொட்டிகள் கூட இல்லை. நாள்தோறும் இவைகள் எடுக்கப்ப வேண்டும். மேய்ச்சல் நிலங்கள் சுருங்கி தீவனம் தட்டுப்பாடு காரணமாக, எருமை உட்பட கால்நடைகள், குப்பை கழிவுகளை உண்ண வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.