/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டுமான தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று
/
கட்டுமான தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று
ADDED : அக் 12, 2025 10:16 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு கட்டுமான கழகம், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தின.
பி.எம்.எஸ்., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு வாரம் கட்டுமான தொழில் பயிற்சி அளித்தனர். தேர்வு நடத்திய பின்னர் அனைவருக்கும் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிலைய பயிற்சியாளர் ராகேஷ் வரவேற்றார். முதல்வர் நவ்ஷாத் தலைமை வகித்து பேசுகையில், ''தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, கட்டுமான திறன் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு, அரசு சான்றிதழ் வழங்கப்படுவது அனைவருக்கும் பயனாக இருக்கும்.
இதன் மூலம் எதிர்காலத்தில் கட்டுமான தொழில் மேற்கொள்வது மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக நிறுவனங்கள் மற்றும் மேலை நாடுகளுக்கு செல்லவும் உதவியாக இருக்கும்.
எனவே, மாணவர்களாக மாறிய பெரியோர், தாங்கள் பெற்ற பயிற்சியினை முறையாக பயன்படுத்தி குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்,'' என்றார். இவர்களுக்கான பயிற்சியைபயிற்சியாளர் சாதிக் அளித்தார்.
சான்றிதழை தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழங்கினார். வனச்சரகர் சஞ்சீவி உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பி.எம். எஸ்., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகி ராஜா, நிலைய பயிற்சியாளர் பிரபாகர், அலுவலக உதவியாளர் ஷீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற முத்துக்குமார் நன்றி கூறினார்.