/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெற்ற குழந்தை கொலை: தாய்க்கு ஆயுள் தண்டனை
/
பெற்ற குழந்தை கொலை: தாய்க்கு ஆயுள் தண்டனை
ADDED : செப் 20, 2024 10:22 PM

ஊட்டி : வறுமையின் காரணமாக, பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சஜிதா,37. இவர்களுக்கு இரு மகள்கள் இருந்தனர். பிரபாகரன் அதே பகுதியில் உள்ள தனியார் பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்தார். அவர், 2018-ம் ஆண்டு உடல் நல குறைவால் இறந்து விட்டதால், பங்களாவில் சஜிதா பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த, 2019 ஜன., 17ல் தனது, 2 மகள்களையும் ஒரு அறையில் உறங்க வைத்து விட்டு சஜிதா மற்றொரு அறையில் உறங்கினார்.
அவருடைய, 14 வயது மகள் எழுந்து பார்த்தபோது, தன்னுடன் உறங்கிய, 4 வயது சகோதரியை காணவில்லை. இது குறித்து, தாயிடம் கூறி உள்ளார். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் ஆய்வில், சஜிதா வேலைக்கு செல்லும் பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுமியின் உடல் காணப்பட்டது. அதனை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உடல் காணப்பட்ட, தண்ணீர் தொட்டியில் மூடி இருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, சஜிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ' கணவர் இறந்த பின் தொடர்ந்த வறுமை காரணமாக, தனது குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்தேன்,' என, ஒப்பு கொண்டார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்டில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில், பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி லிங்கம் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார்ஆஜரானார்.
சஜிதா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.