/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு
/
அரசு பள்ளியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு
ADDED : நவ 10, 2025 11:37 PM

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை தீபா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:
உலக அளவில் பசுமை குடில் வாயுவான 'கார்பன் டை ஆக்சைடு' அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா, 2வது இடத்திலும், இந்தியா, 3வது இடத்திலும் உள்ளன.
உலக அளவில் நடைபெறும் மாநாடுகளில், கார்பன் டை ஆக்சைடை குறைப்பது குறித்து, தீவிரமான பேச்சுவார்த்தை எதுவும் நடப்பதில்லை.'இந்தியாவில், 2070ல் தான் கார்பன் பயன்பாடு பூஜ்ய நிலைக்கு கொண்டுவரப்படும்,' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. காலநிலை மாற்றம், புவிவெப்பம் அதன் போக்கில் வளர்ந்து வருகின்றன. இந்த நிலை தொடரும் பட்சத்தில், பூமியை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது.
பூமியில் ஆறாவது அழிவில் இருந்து மனித குலத்தை பாதுகாக்க, ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெறுவது அவசியம். ஒரு லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தும் போது, நான்கு கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. உலக அளவில், 70 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு மின்சாரம் தயாரிப்பதினால் தான் வெளியேறுகிறது. இயற்கை வளங்களை சுருண்டுவதில் மனிதர்கள் கவலைப்படுவது இல்லை.
நம் பூமியை பாதுகாக்க, ஒவ்வொருவரும் எளிமையான வாழ்க்கை, பசுமையான சுற்றுப்புற சுழல் மற்றும் விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு, ராஜூ பேசினார்.
தொடர்ந்து, 'வந்தே மாதரம்' தேச பக்தி பாடலின், 150 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மஞ்சூர் காவல்துறை சார்பில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.

