/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூடப்பட்ட தேயிலை வாரிய தென் மண்டல அலுவலகம்: மீண்டும் திறக்க வலியுறுத்தல்
/
மூடப்பட்ட தேயிலை வாரிய தென் மண்டல அலுவலகம்: மீண்டும் திறக்க வலியுறுத்தல்
மூடப்பட்ட தேயிலை வாரிய தென் மண்டல அலுவலகம்: மீண்டும் திறக்க வலியுறுத்தல்
மூடப்பட்ட தேயிலை வாரிய தென் மண்டல அலுவலகம்: மீண்டும் திறக்க வலியுறுத்தல்
ADDED : அக் 08, 2025 10:08 PM
ஊட்டி; 'மஞ்சூரில் மூடப்பட்ட, தேயிலை வாரிய தென் மண்டல அலுவலகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னிந்திய தேயிலை வாரியத்தின் தலைமை அலுவலகம் குன்னுாரில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வந்தது.
இந்த அலுவலகங்கள் வாயிலாக சிறு, குறு தேயிலை விவசாயிகள் பயனடைந்து வந்தனர். குறிப்பாக, மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் மட்டும், 10 ஆயிரம் எக்டருக்கு மேல் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 12 ஆயிரம் தேயிலை விவசாயிகள் தங்களது விவரங்களை தேயிலை வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு தேயிலை வாரியத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் திட்டங்கள், சலுகைகள், மானிய திட்டங்கள் அனைத்தும் மண்டல அலுவலகத்தின் வாயிலாக எளிதாக கிடைத்து வந்தது.
மேலும், அந்தந்த கால நிலைக்கேற்ப தேயிலை சாகுபடி மேற்கொள்வது குறித்து கள அலுவலர்கள் அவ்வப்போது கிராமங்கள் தோறும் சென்று பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மஞ்சூரில் செயல்பட்டு வந்த தேயிலை வாரியத்தின் மண்டல அலுவலகம் திடீரென மூடப்பட்டது.
தேயிலை வாரியத்தின் பல்வேறு திட்டங்களை விவசாயிகள் பெற குன்னுாரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடுதல் செலவீனம், கால விரயம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய சங்க தலைவர் ராமன் கூறுகையில்,''சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதி மஞ்சூர் பகுதியில் மூடப்பட்ட தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். விவசாயிகள் சார்பில், கோரிக்கைகள் அடங்கிய மனு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்,'' என்றனர்.