/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீல மலைக்கு பெருமை சேர்க்கும் கூட்டுறவு விழா
/
நீல மலைக்கு பெருமை சேர்க்கும் கூட்டுறவு விழா
ADDED : நவ 18, 2024 09:26 PM

குன்னுார் ; 'நீலகிரியில், 71வது கூட்டுறவு வார விழா நடந்து வரும் நிலையில், அதனை உருவாக்கிய ஆங்கிலேயர்களை மலை மாவட்ட மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
'நாட்டின் கூட்டுறவின் தந்தை' என்று அழைக்கப்படும், பிரடரிக் நிக்கல்சன், குன்னுாரில் தனது இறுதி காலங்களில் வாழ்ந்தவர். குன்னுார் சேனிடோரியம் பகுதியில் உள்ள இவரின் கல்லறையில் கூட்டுறவு சங்கத்தினர், ஆண்டுதோறும் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தில் மலரஞ்சலி செலுத்தி நினைவு கூறுகின்றனர்.
இந்நிலையில், தற்போது நடந்து வரும், 71வது தேசிய கூட்டுறவு வார விழாவையொட்டி, 'நீலகிரிஆவண காப்பகம்', நாட்டின் கூட்டுறவு இயக்கத்துக்கும், நீலகிரிக்கும் ரேஷன் கடைகளின் தோற்றத்திற்கும் உள்ள தொடர்பை நினைவு கூர்ந்துள்ளது.
நீலகிரி ஆவண மைய நிறுவன தலைவர் வேணுகோபால் கூறியதாவது:
கடந்த, 1880ல் மெட்ராஸ் மாகாணத்தில் (தற்போதைய தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா) பஞ்சம் ஏற்பட்ட பட்டினி மற்றும் நோயால் ஒரு கோடி பேர் வரை மக்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், காலரா, பெரியம்மை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை நீலகிரியில் மிக குறைவாக இருந்தது.
அப்போதைய கவர்னர் ரிப்பன் பிரபு உத்தரவில், வருங்கால பஞ்சத்தை தடுக்க, பஞ்ச ஆணையம் (பேமின் கமிஷன்) பரிந்துரைக்கப்பட்டது.
அதில், காடுகளை அழிப்பதால் குறைந்து போன, மண்ணை புதுப்பித்து வன வளம் ஏற்படுத்த வனத்துறை அமைக்கப்பட்டது. துணை உணவு ஆதாரமாக மீன்வளத்துறை மற்றும் கிராமப்புற கடனை தீர்க்க கூட்டுறவு துறை ஏற்படுத்தப்பட்டது.
இதனை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர், நவீன நீலகிரியை நிறுவிய ஜான் சல்லிவனின், மூத்த மகன் ஹென்றி எட்வர்ட் சல்லிவன். இவர் சென்னை சிவில் சர்விசில் சேர்ந்து, கோவை கலெக்டராக பணியாற்றியவர். இத்திட்டம் செயல்படுத்தியவர் பிரடரிக் நிக்கல்சன்.
பஞ்சம் உட்பட ரோடு வசதி இல்லாத கிராம மக்களுக்கு, அரசு உணவு தானியங்களை கையிருப்பில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்தார். இவரின் முயற்சியால், தொலைதூர இடங்களுக்கு, தானியங்கள் அனுப்பப்பட்டு, சேமித்தும் வைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு, இவை தேசிய கொள்கையாக ஏற்று கொள்ளப்பட்டு, பொது வினியோக முறை செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவு வார விழா கொண்டாடும் நேரத்தில், அதனை உருவாக்கிய ஆங்கிலேயர்களை, நீலகிரி மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

