பைக்கில் இருந்து விழுந்த கல்லுாரி மாணவர் சிகிச்சை பலனின்றி மரணம்
பைக்கில் இருந்து விழுந்த கல்லுாரி மாணவர் சிகிச்சை பலனின்றி மரணம்
ADDED : ஜன 05, 2026 05:22 AM

குன்னுார்: குன்னுார் பாய்ஸ் கம்பெனி பகுதியில் பைக்கில் இருந்து, விழுந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லுாரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னுார் கன்னி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 'ஆப்டிகல்' கடை உரிமையாளர் காணிக்கராஜ். இவரது மகன் மெல்வின்,20. ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த புத்தாண்டு தினத்தில், இவர் தனது நண்பர் சஞ்சய்,20, என்பவரின் பைக்கில் ஊட்டிக்கு சென்று திரும்பி கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனி அருகே வந்த போது, பிரேக் பிடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து, இருவரும் பைக்குடன் விழுந்தனர்.
தலையில் காயம் அடைந்த மெல்வின், குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சுய நினைவு பாதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
