/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கவுசிகா நதியை புனரமைக்கும் பணி துவக்கம்; செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதில் தீவிரம்
/
கவுசிகா நதியை புனரமைக்கும் பணி துவக்கம்; செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதில் தீவிரம்
கவுசிகா நதியை புனரமைக்கும் பணி துவக்கம்; செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதில் தீவிரம்
கவுசிகா நதியை புனரமைக்கும் பணி துவக்கம்; செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதில் தீவிரம்
ADDED : பிப் 15, 2024 12:22 AM

கருமத்தம்பட்டி : மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவுசிகா நதியில், நீர் செறிவூட்டும் கிணறுகள், போல்டர் செக் டேம்கள் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சி வழியாக கவுசிகா நதி செல்கிறது. பேரூராட்சி சார்பில், நதியை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஓராண்டுக்கு முன், நதியில் உள்ள முற்செடிகள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்தது.
இதையடுத்து, வாழும் கலை அமைப்பினருடன் இணைந்து, கவுசிகா நதியில் புனரமைப்பு பணிகளை செய்ய திட்டம் வகுக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
வாழும் கலை அமைப்பின் சமுதாய பங்களிப்பு நிதியில் இருந்து, 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நீர் செறிவூட்டும் கிணறுகள், போல்டர் செக்டேம்கள் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் சசிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், வாழும் கலை அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுகுறித்து வாழும் கலை அமைப்பின், தமிழ்நாடு நதி புனரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது:
வாழும் கலை அமைப்பின் நதி புனரமைப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் கவுசிகா நதி ஓடும், 54 கிராம ஊராட்சிகளில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, 100 நாள் வேலை உறுதி திட்ட நிதியின் வாயிலாக, ஏற்கனவே, 450 நீர் செறிவூட்டும் உறை கிணறுகள், 250 போல்டர் செக் டேம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குரு ஜி வரும், மார்ச் 2 ம்தேதி கோவை வர உள்ளார்.
அதையொட்டி, மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவுசிகா நதி படுகையில், 27 லட்சம் ரூபாய் செலவில், 16 நீர் செறிவூட்டும் கிணறுகள், 6 போல்டர் செக்டேம்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
முதன்முறையாக பேரூராட்சி பகுதியில் இப்பணியை துவக்கி உள்ளோம். தொடர்ந்து, கோவில் பாளையம், இடிகரை உள்ளிட்ட கவுசிகா நதி பாயும் பேரூராட்சிகளில் பணிகளை செய்ய உள்ளோம்.
இப்பணிகளால், கவுசிகா நதியில் நீர் வரும் போது, சேகரிக்கப்படும். இதன்மூலம், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதன்மூலம், விவசாயிகள், பொதுமக்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

